அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் நிறுவனங்கள்! 69% இட ஒதுக்கீடுக்கு மூடு விழாவா என ஈபிஎஸ் கேள்வி?

0
260

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடர்கதையாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வர முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் தீட்டும் வகையிலும், படித்த ஏராளமான இளைஞர்களின், அரசு வேலை என்ற கனவில் மண்ணை வாரிப் போடும் வேலையிலும் இந்த அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

Also Read : கருணாநிதி நினைவிடத்தில் 30ம் தேதி அரசு டாக்டர்கள் மவுனப் போராட்டம்! பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குமுறல்!

ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று தேனொழுக தேர்தல் நேரத்தில் பேசி, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கைகழுவிவிட்டார். மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியபோதெல்லாம், அம்மாவின் அரசு உடனுக்குடன் முன் தேதியிட்டு வழங்கிய அகவிலைப்படி உயர்வை இந்த திமுக அரசு நிறுத்தியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக அரசு பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது.

இதன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு, நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படி தனியார் நிறுவனங்கள், ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

Also Read : வங்கக் கடலில் நாளை புயல் உருவாகிறது! இன்றே பல இடங்களில் கனமழை! 11, 12ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும்!

இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண். 115 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனித வள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆ.கு. பரூக்கி தலைமையிலான இந்த குழு, ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வு வரம்புகள் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக உள்ளது.

அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்களை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது, தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை, அதாவது, வெளி முகமை ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனித வள அரசுப் பணியிடங்களை, அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது, அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்வது போன்ற சில ஆய்வு வரம்புகள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

இந்த உத்தரவு பணியாளர் விரோத நடவடிக்கை மட்டுமல்லாது, சமூக நீதிக்கும் எதிரானதாகும். அரசு வேலைக்காக இரவும் பகலும் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவில், அடிவேரில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் இந்த குதர்க்கவாத விடியா அரசின் செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ பெரும்பாலான அரசு ஊழியர் அமைப்புகளும் எதிர்க்கின்றன. படித்த இளைஞர்களின் வருங்காலத்தைப் பாழாக்கும் இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த அரசின் பொம்மை முதலமைச்சரை வற்புறுத்துகிறேன். வழக்கம் போல் மவுன சாமியாராக நாடகமாடினால், பாதிக்கப்படும் படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry