கோபா அமெரிக்கா(Copa América) கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா சாம்பியன் பட்டம் வென்றதை அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்ற கோபா கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வந்தது. இதில், அரையிறுதியில் அர்ஜென்டினா அணி கொலம்பியாவையும், பிரேசில் அணி பெருவையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின. பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிரோவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30மணிக்கு தொடங்கி நடந்த இறுதி போட்டியில் பிரேசில்–அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரேசில் அணி தியாகோ சில்வா தலைமையிலும், அர்ஜென்டினா அணி மெஸ்சி தலைமையிலும் களம் இறங்கின. 22வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.
¡¡¡EL GRITO DE TODO UN PAÍS!!! 🇦🇷 🤩🥳
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/sbX8zaOBY3
— Copa América (@CopaAmerica) July 11, 2021

பதில் கோல் அடிக்க பிரேசில் வீரர்கள் போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 2வது பாதியிலும் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. குறிப்பாக மெஸ்சியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர் கோல் அடிக்க பல வாய்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அந்த வாய்ப்புகள் நழுவியது. பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், சில்வா, லூகாஸ், ரிச்சர்லிசன், எவர்டன் சோரெஸ், ஃபிரெட் உள்பட அணியினர் கோல் அடிக்க கடுமையாக போராடினர். ஆக்ரோஷமாக ஆடியும் கடைசி வரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. கூடுதலாக 5நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையிலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை மைதானத்தில் மெஸ்சி மற்றும் வீரர்கள், அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
🤩🔟📱🥇#CopaAmérica#VibraElContinente#VibraOContinente pic.twitter.com/Av4B3knLms
— Copa América (@CopaAmerica) July 11, 2021

அர்ஜென்டினா அணி 15வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 1993ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. சொந்த மண்ணில் களம் இறங்கிய பிரேசில் 10வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தோல்வியால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.47 கோடியும், 2வது இடம் பெற்ற பிரேசிலுக்கு ரூ.25 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry

