இந்த வார ராசிபலன் – செப்டம்பர் 25ல் இருந்து அக்டோபர் 1வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
மேஷம் : கம்பீரமான தோற்றம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசுவதால் நண்பர்கள் கூட விரோதிகள் ஆவார்கள். அகங்கார குணமும், தான் என்ற எண்ணமும் நேசிப்பவரைக் கூட வெறுக்கச் செய்து விடும் என்பதால் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது நல்லது. தாய் வழியில் ஆதாயம் உண்டு. தாயாரின் வேலை, தொழிலை எடுத்து செய்யும் அமைப்பு உண்டாகும். சிலர் மனைவி அல்லது தாயார் பெயரில் அசையும், அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். கடன் வாங்கும் விஷயத்தில் மட்டும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். கிரெடிட் கார்டு, ஆன்லைன் லோன் செயலியில் கடன் வாங்கி விட்டு அவதிப்பட நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
ரிஷபம் : அனைவரையும் வசியப்படுத்தும் அழகான தோற்றத்தைக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி எதையும் முயற்சி செய்து முடித்துக் காட்டுவீர்கள். வேலை ரீதியாக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்கும் முயற்சி கைகூடும். வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை அமையும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். ரிஷப ராசியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். விவசாயம், இரும்பு சார்ந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். டிராவல்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உணவு டெலிவரி செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?
மிதுனம் : எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் மிதுன ராசிக்காரர்களே, பிறர் பார்வைக்கு கோமாளி போலவும், ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் அனைவரிடமும் நயமாக பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்க முடியாத நிலை ஏற்படும். பணத்தை தண்ணீர் போல செலவழிப்பீர்கள். கலை மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்குவீர்கள். ஒரே இடத்தில் நீண்ட காலத்துக்கு வேலை செய்யலாம் என்று நீங்கள் நினைத்தாலும் காலம் அதற்கு இடம் கொடுக்காது. எங்கேயும் தேங்கி நின்று விடாமல், உங்களின் பயணம் தொடரும். சிலர் சுயதொழில் செய்யவும் வாய்ப்புகள் உண்டு. தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து மற்றொரு இடத்தில் பணம் சம்பாதிக்க நேரிடும். இனிப்பு வகைகள் தயாரிப்பு, விற்பனையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 25, 26 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம் : மரியாதை, சாந்தம், சகிப்பு தன்மை, கடவுள் பக்தியும் அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே, எந்தத் துறையில் நுழைந்தாலும், அங்கே உங்களின் அதிகாரமும், ஆளுமை திறனையும் நிலை நிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும், நிர்வாகத் திறனாலும் அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். கையில் பணம் இல்லாமல் இருக்க முடியாது. நீங்கள் கடனாக கொடுக்கும் பணம் எதுவும் திரும்ப வராது என்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர்கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். 27, 28 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். வாகனங்கள் பழுதாகி அலைச்சல் தரும். வார இறுதி நாட்களில் தாயார் வழியில் ஆதாயம் உண்டு.
Also Read : ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!
சிம்மம் : சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் விடாமுயற்சியால் சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்து முடிப்பீர்கள். உங்களின் அமைதியான தோற்றத்தை கண்டு எளிதில் ஏமாற்றிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தால் அது நடக்காது. முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கும் குணம் மற்றவர்களை கவரும். அடுத்தவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட நீங்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவதை தவிர்ப்பது நல்லது. கையில் பணம் தங்காதபடி செலவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். யோசித்த அந்தக் கணமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள் என்பதால் சிலரின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும். 29, 30 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது.
கன்னி : அதிகம் ஞாபக சக்தி கொண்ட கன்னி ராசிக்காரர்களே, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் சூட்சமத்தை கற்று கொள்ளுங்கள். தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்வது நல்லது. மற்றவர்கள் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து திருத்த வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். அலுவலகத்தில் வேலையில் மட்டும் கவனமாக இருங்கள். அலட்சியமாக இருந்தால் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு சென்று வர வாய்ப்பு அமையும். சிலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு தற்போது கிடைக்கும். 1ம் தேதிக்கு பிறகு சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை 30ம் தேதிக்கு முன்பே செய்துவிடுங்கள்.
Also Read : செவ்வாய்..! தோஷமா? யோகமா? இவங்களுக்கு எப்பவுமே செவ்வாய் தோஷம் இல்லையாம்! Sevvai Dosham simple explanation!
துலாம் : எந்த சூழ்நிலையிலும் எடுத்த முடிவுகளை மாற்றி கொள்ளாத பிடிவாத குணம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். கதை, கவிதை, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திரைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமையை நிரூபிக்க புதிய வாய்ப்புகள் தேடிவரும். இதுவரை நெருக்கடி கொடுத்த கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். எதிரி, நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வரும். நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான் என்பதை உணர்ந்து குடும்ப பொறுப்புகளை வாழ்க்கை துணை வசம் ஒப்படைத்து விடுங்கள். அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.
விருச்சிகம் : எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ரகசியங்களை பாதுகாக்கும் இயல்பு உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும். உங்கள் பலம் என்ன என்பது உங்களுக்கு தெரிய வரும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ஏற்றமான வாரம். பிறப்பு ஜாதகத்தில் யோகமான தசா, புத்தி நடப்பவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும். தொட்டது துலங்கும் என்றாலும் சனி பகவான் பார்ப்பதால் எதிலும் சற்று கவனமாக இருங்கள். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம். ரியல் எஸ்டேட் அதிபர்கள், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் பிறரை நம்பி நிர்வாகத்தை ஒப்படைத்தாலும் அவ்வப்போது நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 29, 30,1 ஆகிய தேதிகளில் சற்று கவனமாக இருங்கள்.
தனுசு : எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, குழந்தைகள் மீது அதீத பாசம் வைத்திருந்தாலும் ஆண் பிள்ளைகள் விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். அலட்சியமாக இருந்தால் குழந்தைகளால் அவப்பெயர் ஏற்படும் நிலை உருவாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கலாம் என்ற எண்ணம் தோன்றும். சொந்த தொழில் செய்பவர்கள் கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியை தள்ளிப்போடுங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு வந்து போகும். வணிகர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. பூர்வீகச் சொத்தை விற்கும் முயற்சிகள் சாதகமாக அமையும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 27, 28 ஆகிய தேதிகளில் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம் : செலவைக் குறைப்பதில் தனி கவனம் செலுத்தும் மகர ராசிக்காரர்களே, வருமானத்தில் தடை, தாமதம் இருந்தாலும் பொருளாதாரத்தில் பெரியளவிற்கு பாதிப்பு இருக்காது. வாழ்க்கை துணை, பெற்றோரை அனுசரித்து செல்லுங்கள். உங்களது பொறுப்பற்ற பேச்சால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும். உத்தியோக மாற்றத்திற்காக சற்று காத்திருக்கவும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். அரசு துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான வாரம் இது. தையல் கலைஞர்கள், அழகு கலை நிபுணர்களுக்கு ஓரளவுக்கு அனுகூலமான வாரம். அரசியல்வாதிகளுக்கு சமூக பொறுப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 29, 30 ஆகிய தேதிகளில் உறவினர்கள், நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?
கும்பம் : அளவு கடந்த பொறுமையும், நிதானமும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ராசிநாதன் சனிபகவான் ராசியில் இருப்பதால் பிடிவாத குணம் அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயங்களை பெரிது படுத்தாதீர்கள். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லுங்கள். நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். திடீரென அறிமுகமாகும் நபர்களை நம்ப வேண்டாம். தாய் வழியில் செலவுகள் உண்டாகும். புதிய ஒப்பந்தம், ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது. ஏழரை சனி பாதிப்பால் அனைத்திலும் சாதகமற்ற நிலை ஏற்படும். வேலை, தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு உருவாகும். பொருளாதாரத்தில் பின்னடைவு, உடல் நலக்குறைவு, கடன், எதிரிகளால் தொல்லை உண்டாகும். சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 27, 28 ஆகிய தேதிகளில் கவனமாக இருங்கள்.
மீனம் : எப்பொழுதும் கற்பனை உலகில் மிதக்கும் மீன ராசிக்காரர்களே, ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் காலியாகும். சிலர் கிரெடிட் கார்டுகளை அநாவசியமாக பயன்படுத்தி விட்டு பின்னர் கவலைப்படுவார்கள். வங்கி துறை, ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு அனுகூலமாக வாரம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சரிசமமாக இருக்கும். குழந்தைகளால் வீட்டில் வாக்குவாதங்கள் ஏற்படும். முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டு அவதிப்படுவீர்கள். தந்தை, தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. விரைய சனியின் பாதிப்புகளால் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமித்து வைக்க முடியாத நிலை உண்டாகும். சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 27, 28 ஆகிய தேதிகளில் அலைச்சல் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry