கர்நாடகாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவுமா?

0
72

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்கர்நாடாவிலும் பரவுகிறது. கர்நாடகாவில் இந்த புதிய வகை வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மனித குலத்துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது கோவிட்-19ன் டெல்டா வகை வேரியன்ட்தான். இதிலிருந்து தற்போது AY.4.2 என்ற புது வைரஸ் உருவாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் இந்த புதிய வகை வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக பிரிட்டனில் அதிகரித்து, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில், குழந்தைகள், பெரியவர்கள் என 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் AY.4.2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா வகை வைரஸோடு ஒப்பிடுகையில் ஏஒய்.4.2 வைரஸின் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாக பிரிட்டன் அரசு கருதுகிறது. டெல்டா வைரஸ்களைவிட இது 15 சதவீத வேகத்துடன் பரவும் தன்மை கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்பாடு குறைவாகத்தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இது ஆய்வுப்பூர்வமாக இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், டெல்டா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ஏஒய்.4.2 வைரஸ் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸானது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி, நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகாவில் AY.4.2 வைரஸால் இதுவரை சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சக ஆணையர் டி ரன்தீப், “கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 3 பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 பேரும் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை தொற்றை கண்காணிக்க மத்திய அரசுடன் இணைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய வகை தொற்று பாதிப்பால் உயிரிழபு எதுவும் ஏற்படவில்லைஎன்றார்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry