சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, செயலை நியாயப்படுத்தவோ முடியாது! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, செயலை நியாயப்படுத்தவோ முடியாது! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட  விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விவசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை  அமைக்கும்படி கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.

இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வுஇன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை. மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுகேட்புப் பாதிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம். இந்தியர்களின் ரகசியத்தை காப்பது முக்கியம். பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும்.

வழக்கு தொடர்ந்த மனுதாரர்களில் சிலர் செல்போன் ஒட்டுக்கேட்பால் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தரங்க உரிமைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது. ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் போதிய அவகாசம் அளித்தது. செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது.

எனவே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி 3 பேர் கொண்ட சிறப்பு குழு விசாரிக்க உத்தரவிடுகிறோம். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில், 3 பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி, சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஓபராய் ஆகியோர் குழுவில் இடம்பெறுவார்கள். நிபுணர் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணை குறித்த அறிக்கையை 8 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்என்று தெரிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!