தென் மாவட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் சசிகலா! சஞ்சலப்படும் அதிமுக நிர்வாகிகள்! சரியாகக் கணித்த வேல்ஸ் மீடியா!

0
9

அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, வி.கே. சசிகலா, தென்மாவட்டங்களில் ஒரு வார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தளத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.    

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்பதில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வாளர்கள் என்று மதுரையில் நேற்று அவர் கூறியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளோம்என்றார். ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே ஜெயக்குமார் சூசகமாக தெரிவித்தார்.

முன்னதாக மதுரை வந்த ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெறவில்லை. ஓபிஎஸ், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரது படங்களே இடம்பெற்றிருந்தன. அதேநேரம், தென்மாவட்டங்களை குறிவைத்து ஓபிஎஸ் வியூகம் வகுப்பதாக வேல்ஸ் மீடியாவில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

Also Read :- சசிகலாவுக்கு கிரீன் சிக்னல், EPSக்கு மறைமுகக் கண்டனம்! தென் மாவட்டங்களை உசுப்பிவிட்டு கட்சியை உடைக்க OPS வியூகம்?

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்புக்கு மத்தியில், அதிமுக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, ஒரு வாரகால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்ட அவருக்கு, ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் செல்லும் வழியில் சசிகலா 25 இடங்களில் தொண்டர்களை சந்திக்கிறார். தஞ்சையில் இன்று இரவு தங்கும் சசிகலா, நாளை, டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 28ம் தேதி மதுரை செல்லும் சசிகலா, முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

29ம் தேதி ராமநாதபுரத்தில் தொண்டர்களை சந்திக்கிறார். 30ம் தேதி காலை பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் பங்கேற்கும் சசிகலா, அன்றைய தினமே தஞ்சை திரும்புகிறார். நவம்பர் 1ம் தேதி தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சசிகலா, ஆதரவாளர்களை சந்திக்கிறார். இதன்பின்னர் திருநெல்வேலி உள்பட மேலும் சில மாவட்டங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் வருகை அதிமுக தொண்டர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் ஆதரவு தெரிவிக்காதவர்கள், இனி வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கக் கூடும் என்று கருதப்படுகிறது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் இந்த மன சஞ்சலத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பே காரணம் என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கட்சியில் கோலோச்ச வேண்டுமா? என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. ஓரிரு வாரங்களில் அதிமுகவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry