சசிகலாவுக்கு கிரீன் சிக்னல், EPSக்கு மறைமுகக் கண்டனம்! தென் மாவட்டங்களை உசுப்பிவிட்டு கட்சியை உடைக்க OPS வியூகம்?

0
31

சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள், என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அவரது இந்த கலகக் குரல், அதிமுக பிளவுபடுமா? என்ற விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது.

Representational Image

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுச்செயலாளர் என்ற பெயருடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நலத்திட்ட உதவிகளை செய்தார். தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அவரை சட்டரீதியாக சந்திப்போம் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும், ‘சூரியனை பார்த்து…! அத நான் ஓபனா சொல்ல முடியாது என்றும் எடப்பாடி விமர்சித்திருந்தார்.

ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், சசிகலாவுடன் நல்லுறவில் இருப்பதாக அதிமுக-வினரே கூறுகின்றனர். சசிகலாவுக்கு எதிரான கருத்துகளை அவர் வெளியிடுவதும் இல்லை. அதேநேரம், சசிகலாவுக்கு ஆதரவான தென் மாவட்டங்களில் இருந்து இதுவரை ஆதரவுக்குரல் வெளியாகவில்லை. தென்மாவட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு அதிமுக நிர்வாகியும் சசிகலாவை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. போஸ்டருக்கு பெயர்போன மதுரையில் கூட, அதிமுக-வினர் சசிகலாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டவில்லை.

அதிமுக-வில் கொங்கு மண்டல ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது, நிர்ணயிக்கும் சக்திகளாக அவர்களே இருக்கிறார்கள், அவர்களது முடிவு தன் மீது வலிந்து திணிக்கப்படுகிறது என்று ஓபிஎஸ் வருத்தத்துடன் இருந்து வருகிறார். எனவே, தென் மாவட்டங்களை உசுப்பிவிட்டு, சசிகலாவுக்கு ஆதரவுக்களமாக திருப்ப ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். அதை பிரதிபலிக்கும் விதமாகவே மதுரை செய்தியாளர்கள் சந்திப்பு இருந்தது.

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகவே இன்றளவும் உள்ளது என்றார். முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, திமுக அவசரப்படுகிறது, காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது, எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டுமென நினைக்கின்றனர்; அது நடக்காது எனக் கூறினார். அதன் தொடர்ச்சியாக, கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும், அதிமுக தொண்டர்கள் முதல், பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை, அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

அதிமுக தலைமைக்குள் இருக்கும் கருத்து மோதல், செய்தியாக அல்லது யூகங்களாகவே இதுவரை பேசப்பட்டு வந்தது. இப்போது, கருத்து வேறுபாட்டை ஓபிஎஸ் பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார். சசிகலா வழிகாட்டுதலில் அல்லது தலைமையில் கட்சியை வழிநடத்த தயார் என்று ஓபிஎஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவே இதனைக் கருதலாம். இந்தப் பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனுவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், மணிகண்டன் மற்றும் மூத்த நிர்வாகி ராஜன் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

இவர்கள் அனைவரும் தென்மாவட்ட அதிமுக-வில் கோலோச்சுபவர்கள். இதன் மூலம் தென் மாவட்டத்தின் ஆதிக்கத்தை கட்சியில் நிலைநாட்டச் செய்ய வேண்டும் என்று இவர்களும் விரும்புவதாகவே தெரிகிறது. பசும்பொன் தேவர் குருபூஜைக்கான தங்கக் கவசத்தை வழங்கிவிட்டு, சென்டிமென்ட்டாக, சசிகலா ஆதரவு, ஈபிஎஸ் எதிர்ப்பு என்ற கருத்தை ஓபிஎஸ் பதிவு செய்திருப்பது, அவர் கலகக்குரலை வெளிப்படுத்திவிட்டார் என்பதையே காட்டுகிறது. இனி, எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு எதிராக பொதுத்தளத்தில் எதிர்வினையாற்றினால், அதிமுக பிளவுபடுவதற்கான சூழல் ஏற்படக்கூடும். சசிகலா, ஓபிஎஸ் ஒரு அணியாகவும், ஈபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக பிரிந்து இயங்கலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry