‘பீஸ்ட்’ டிரெய்லர் எந்தப் படச்சாயலில் உள்ளது? யோகி பாபுவின் கூர்காவா?, மணி ஹெய்ஸ்ட்டா? நெட்டிசன்கள் விவாதம்!

0
148

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும்நிலையில், சில படங்களின் சாயல் படத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையரங்குகள் மற்றும் யூ-டியூபில் டிரெய்லர் வெளியானது.

இந்நிலையில், பீஸ்ட் டிரெய்லரில் சில படங்களின் சாயல் உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். யோகி பாபு, மனோபாலா, சார்லி ஆகியோரின் நடிப்பில், 2019-ம் ஆண்டு வெளியான ‘கூர்கா’ படத்தைப்போல் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

‘கூர்கா’ படத்தில், தீவிரவாத கும்பல் ஒன்று அந்த வணிக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாலில் இருக்கும் மக்களை, பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்ளும்.
பின்னர், அந்த தீவிரவாத கும்பலிடமிருந்து, செக்யூரிட்டிகளான யோகிபாபு, சார்லி மற்றும் நாய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, எப்படி பணயக் கைதிகளாக இருக்கும் மக்களை மீட்கின்றனர் என்று நகைச்சுவையாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். பீஸ்ட் டிரெய்லர் காட்சிகளும் இதையொட்டி இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.

இதேபோல் கொரோனா ஊரடங்கின்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் உலகளவில் பிரபலமானது. இந்த வெப் சீரிஸ் போன்று, ‘பீஸ்ட்’ படத்தின் கதைக்களம் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

‘மணி ஹெய்ஸ்ட்’ இல் வங்கி ஒன்றை, ஹைஜாக் செய்யும் புரொபஸர் தலைமையிலான கொள்ளை கும்பல், அங்கிருந்த மக்களை பிணயக் கைதிகளாக வைத்து கொள்ளையடிக்கும். அந்த கொள்ளை கும்பல், கோமாளி மாஸ்க் அணிந்திருந்த நிலையல், இங்கு கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க்கை அணிந்து ஹைஜாக் செய்கின்றனர் தீவிரவாதிகள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ‘மணி ஹெய்ஸ்ட்’  வெப் சீரிஸில் விஜய் புரொபஸராக நடித்தால் நன்றாக இருக்கும் என அதன் இயக்குநர் அளித்த பேட்டியை பார்த்து விட்டு, இயக்குநர் நெல்சன் இப்படியொரு கதையை விஜய்க்காக உருவாக்கினாரா என தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கெவின் ஜேம்ஸ் இயக்கத்தில் வெளியான Paul Blart Mall Cop படம் போன்று பீஸ்ட் ட்ரெய்லர் இருப்பதாக திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய் கதவுகளை கொண்டு துப்பாக்கி சூட்டில் இருந்து தப்புவது போல காட்டப்பட்டு இருக்கும், இந்த காட்சியை கமல்ஹாசனின் விக்ரம் பட ட்ரைலருடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry