பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! பின்னணியில் ராணுவ தளபதிகள்! 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு!

0
76

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியின் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்து இருக்கிறார்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில் பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அதைத்தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி, இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்ரான்கானின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ள அதிபர் ஆரிப் ஆல்வி, பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய திருப்பமாக ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த ராணுவ ஜெனரல்கள், இம்ரான் கானை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் கான் சார்பாக ராணுவத்துடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து இருந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry