பிரதமர் மோடியை அம்பேதக்ருடன் ஒப்பிட்ட விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இளையராஜாவுக்கு ஆதரவு அளித்துள்ளார். இளையராஜாவை விமர்சிப்போருக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடியை இளையராஜா பாராட்டியதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே காணப்படுகிறது. திமுக, அதன் கூட்டணி கட்சியினர், திரையுலகில் உள்ள திமுக விசுவாசிகள், அனுதாபிகள், திமுக ஆதரவு அம்பேத்கரியவாதிகள், பெரியாரியவாதிகள் போன்றோர் இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். டிவிட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளையும் அவர்கள் டிரெண்ட் செய்தனர்.
மோடியைப் பற்றிய கருத்தை, பார்வையை பதிவு செய்ய இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்னவிதமான கருத்து சுதந்திரம் என்று பாஜகவினர் கேட்கின்றனர். திமுக-வுக்கு பிரதமர் மோடியை பிடிக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த தமிழகமும் அவரை எதிர்க்க வேண்டும் என்பது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு, ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறாறா? என்று அக்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். மு.க. ஸ்டாலினை அம்பேத்கரோடும், உதயநிதி ஸ்டாலினை சேகுவாராவோடும், கனிமொழியை வேலுநாச்சியாரோடும் ஒப்பிடுவது சரி என்றால், சமூகநீதியைக் காப்பாற்றும் பிரதமர் மோடியை அம்பேத்கரோடு ஒப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “இந்தியாவின் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் கருத்துக்கள் ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிகளுக்கும் விருப்பமில்லாத வகையில் இருந்ததால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து வார்த்தைகளால் அவரை இழிவுபடுத்தி வருகின்றனர். இதுதான் ஜனநாயகமா? ஒருவர் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஏன் அவர்களை அவமானப்படுத்த வேண்டும்?” எனக்கேட்டுள்ளார்.
முன்னதாக புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்” என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில், “நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு அம்பேத்கர் முக்கிய பங்கேற்றினார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
அம்பேத்கரை தெரிந்துகொள்வதைப் போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.
“மேக் இன் இந்தியா” திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவுப் பாதைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார். வீடுகள், கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும், பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்.” என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry