தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு! பெற்றோரிடம் விசாரித்த பாஜக குழு!

0
242

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், உண்மையை கண்டறிவதற்காக விசாரணை நடத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அமைத்த குழுவினர், அரியலூரில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த மாணவி கடந்த மாதம் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து உயிரிழந்தார்.

பள்ளியில் அவரை மதம்மாற வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டின. அந்த மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக போராட்டத்தில் இறங்கியது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

மாணவி மரணத்தில் பின்னணயில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்க பிரதேச மாநில பாஜக துணை தலைவரான சந்தியா ரே எம்.பி., தெலங்கானாவைச் சேர்ந்த நடிகையும், பாஜக மகளிர் அணி முன்னாள் செயலாளருமான விஜயசாந்தி, மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவரும், மகளிர் உரிமைப் போராளியுமான சித்ரா தாய் வாக், கர்நாடக மாநில மகளிர் அணி தலைவர் கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா அமைத்தார்.

அக்குழுவினர் உள்ளிட்ட பாஜகவினர் அரியலூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்துக்கு சென்று மாணவியின் இல்லத்தில் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் பல இடங்களில் பலரிடம் விசாரணை நடத்திய அவர்கள், விசாரணை குறித்த விவரங்களை பாஜக தலைவரிடம் அவர்கள் அறிக்கையாக அளிக்க உள்ளனர்.

மாணவி குடும்பத்தினரை சந்தித்த பிறகு அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, “மதமாற்றப் பிரச்னைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த மாணவிக்கு நேர்ந்தது நாளை எந்த குழந்தைக்கும் நடக்கலாம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கான்வென்ட்களில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து திமுக அரசு மவுனம் காப்பது ஏன்? இந்த விவகாரத்தில் முதல்வர் பேசாதது ஏன்? அவருக்கு இந்து வாக்குகள் வேண்டாமா? அவருக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் மட்டும்தான் வேண்டுமா? இது நீதி பற்றியது. அவர்கள் பிரச்சினையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.

அரியலூர் விசாரணையை முடித்துக்கொண்டு பாஜக குழு, தஞ்சாவூர் சென்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்துப் பேசியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி, “மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். வழக்கு சிபிஐக்கு சென்றதால், அவர் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம்காட்டினார். இருப்பினும் நாங்கள் கூறியதை முழுமையாக கேட்டுக்கொண்டார். மாணவி படித்த மைக்கேல்பட்டிக்குச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் அங்கு செல்லவில்லை”. என்று கூறினார்.

இதனிடையே, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பிரியங்கா கனூங்கோ தலைமையில் நால்வர் குழுவினர், மாணவி தற்கொலை குறித்து டெல்லியில் இருந்து வந்து, தஞ்சை மற்றும் அரியலூரில் விசாரித்துச் சென்றனர். அப்போது, மாணவி தங்கியிருந்தது விடுதி உரிமம் கடந்த நவம்பர் மாதமே காலாவதியாகிவிட்டது என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதி என்று பதிவு செய்யப்படாமல், குழந்தைகள் காப்பகமாகவே அது பதிவு செய்யப்பட்டிருந்ததாவும் அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், மாணவி தற்கொலைக்கான காரணத்தை விசாரிக்கவும், மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனடியாக இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தற்கொலைக்கான மூல காரணத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை/மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது தேசிய மனித உரிமை ஆணையம்/தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு தகுந்த வழிகாட்டுதல் தருமாறு கோரப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry