பாஜக, கழட்டிவிடப்பட்டதா? கழண்டு கொண்டதா! தனித்துப் போட்டி என அண்ணாமலை அறிவிப்பு!

0
148

பாஜக கேட்ட இடங்களை அதிமுக தர மறுத்ததாக கூறப்படும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் அதிமுக குறித்த பேச்சு கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், நயினார் நாகேந்திரன் அப்படி பேசக்கூடியவர் அல்ல, அவரை திட்டமிட்டு பேச வைத்தார்கள் என்று அதிமுக 2-ம் கட்ட தலைவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, அதிமுக தலைமை இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக ஐ.டி. விங் கடுமையான எதிர்ப்பையும், கண்டனங்களையும் பதிவு செய்தது. அதிமுக ஆட்சியை இழப்பதற்கு பாஜகதான் காரணம் என அதிமுக ஐடி விங் குற்றம்சாட்டியது.

நயினார் நாகேந்திரன் பேச்சை காரணமாக வைத்து கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் தலமைக்கு அறிவுறுத்தினர். இந்தநிலையில், டெல்லி பாஜக தலைமை தலையிட்டு, ஈபிஎஸ்-ஐ சமாதானப்படுத்தியது. அதன்பிறகு தமிழக தலைவர் அண்ணாமலை ஈபிஎஸ்-ஐ தொடர்பு கொண்டு பேசியதுடன், செய்தியாளர்கள் சந்திப்பிலும் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், இந்த விவகாரம் புகைந்து கொண்டுதான் இருந்தது. இடப்பங்கீடு விவகாரத்தின்போது இதற்கான எதிர்வினையை காட்டலாம் என்று அதிமுக இரட்டைத் தலைமை காத்திருந்தது. நாமாக வெளியேற்றாமல், அவர்களாகவே வெளியேறும் வகையில் செய்வோம் என்பது அவர்களது வியூகமாக இருந்தது.

அதேநேரம், பாஜக அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 25-ந் தேதி நடந்த கூட்டத்தில், “அண்ணாமலை வரவுக்குப் பிறகு தமிழக பாஜக-வினருக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே தனித்துப் போட்டியிட்டு பலத்தை பரிசோதிப்போம் என தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சியாக மக்கள் நம்மைத்தான் நினைக்கிறார்கள், டாக்டர் கிருஷ்ணசாமியை உடன் வைத்துக்கொண்டு தனித்து போட்டியிடலாம் என அப்போது சிலர் கூறியுள்ளனர். அண்ணாமலை தலைமையிலான இந்தக் கூட்டத்தில், ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன், வி.பி. துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்தே, அதிமுக கூட்டணில் பாஜவிற்கான இடங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாஜவிற்கு 10 சதவீதத்திற்குள்ளான இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்தது. ஆனால், பாஜக 30 சதவீத இடங்களை கேட்டது. அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களையும் பாஜக கேட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே, பாஜகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதால், நாங்கள் கொடுக்கும் இடங்களில் மட்டுமே நீங்கள் போட்டியிட வேண்டும் என அதிமுக அறிவுறுத்தியது. இதை பாஜக ஏற்கவில்லை.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளது. தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல.

அதிமுகவுடனான கூட்டணி இடப்பங்கீட்டில் இழுபறிதான் இதற்குக் காரணமா என கேட்டபோது, அதிமுகவின் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் நான் நேசிக்கக் கூடிய தலைவர்கள். கடினமான சூழலிலும் அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் வழிநடத்தினார்கள். நகர்ப்புற தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடரும். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுக தலைவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்’என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry