புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை! டிப்ளமோ இனி 2 ஆண்டுகள்தான்

0
14

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகம், கல்வித்துறை அமைச்சகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் இலக்கு

இந்த புதிய கல்விக்கொள்கையின் மூலம் நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்.  கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்.

தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்விசார் படிப்புகள் இணையவழியில் தொடங்கப்படும்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். உயர்கல்வியில் எம்.பில். ரத்து செய்யப்படுகிறது. தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும்.

கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது. உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம். முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறையில் இருக்கும்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்ற உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும். இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும். 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய கல்விக்கொள்கை மூலம் 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.

பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் 1 ஆண்டு வரை விடுப்பு எடுத்து பின்னர் படிப்பை தொடரலாம். டிப்ளமோ படிப்புகள் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி தொடர்ந்து அமலில் இருக்கும். புதிய கல்விக்கொள்கையில் பெண் குழந்தைகளுக்கு செயல்முறை கல்வி அறிமுகம்

5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி அவசியம். 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி முறை ஒரே மாதிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கையில் என்னென்ன மொழிகள் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.

பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மை வாய்ந்த மொழிகளும் விருப்பமொழியாக வழங்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.