இரட்டைத் தலைமையால் பெரும் சரிவு! கரையான் போல அரிக்கும் பாஜக! தலைமை மாற்றத்தை நோக்கி அதிமுக!

0
297

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தோல்வி தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.

2019 மக்களவைத் தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-ல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் என அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் அதிமுக-வுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது யதார்த்தமாக இருந்தாலும், ஒரு மாநகராட்சியைக் கூட அதிமுக-வால் பெற முடியவில்லை.

மாநகராட்சி வார்டுகளைப் பொறுத்தவரை திமுக 952 இடங்களை வென்ற நிலையில், அதிமுக-வுக்கு 164 இடங்களே (11.94%) கிடைத்தன. நகராட்சியில் திமுக 2360 வார்டுகளிலும், அதிமுக வெறும் 638 இடங்களிலும்(16.80%) வென்றன. பேரூராட்சி வார்டுகளைப் பொறுத்தவரை திமுக 4388 இடங்களிலும், அதிமுக 1206 வார்டுகளிலும்(15.82%) வெற்றி பெற்றுள்ளன.

2011 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க., கிட்டத்தட்ட 50 சதவீத இடங்களை வென்ற நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில், 15 சதவீதத்தை மட்டுமே அதிமுக-வால் பெற முடிந்தது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, களத்தில் சோர்வாகவும், நிதியை வெளியில் எடுக்காததும் இதன் மூலம் தெளிவாகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் ஆன்லைன் பிரச்சாரம் மூலமே திமுகவிற்கு வெற்றிகளை அள்ளி இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலின்போது கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு கொங்கு மண்டலத்தில் அமோக வெற்றி பெற்ற அதிமுக, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. எஸ்.பி. வேலுமணியின் இரும்புக்கோட்டை என கூறப்படும் தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக தன்வசமாக்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும், பழனிசாமியின் வீடு அமைந்துள்ள சேலம் மாநகராட்சியின் 23வது வார்டிலும் கூட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. தேனி மாவட்டம் அதிமுக கோட்டை என கருதப்படும் நிலையில், ஓபிஎஸ் வசித்து வரும் பெரியகுளம் நகராட்சி 21-வது வார்டில் அதிமுக தோற்றுள்ளது. தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, கம்பம், கூடலூர், சின்னமனூர் என 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஓபிஎஸ் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வரும் போடி தொகுதியில், போடி நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது.

ஓபிஎஸ் வாக்களிப்பு

கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்தான் இந்த அபரிமிதமான வெற்றி என திமுகவினர் கூறுகின்றனர். அதேநேரம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணி அரசியலை கையிலெடுத்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய அளவில் சக்திமிக்க தலைவராக உருவெடுத்து வரும் நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வசிக்கும் வார்டுகளில் கூட கட்சி வேட்பாளர் வெற்றி பெற முடியாமல் போனது அதிமுக தொண்டர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

சென்னை நகரில் உள்ள 200 வார்டுகளில் 173 வார்டுகளில் அதிமுக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. ஆனால் 59 வார்டுகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. மேலும் 111 வார்டுகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வாக்கு சதவிகிதம் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. இரட்டைத் தலைமையால் கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில், தமிழக அரசியலில் கட்சி நிலைத்திருக்க, உரிய நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிமுக நிர்வாகி ஒருவர், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாக நாங்கள் நினைத்திருக்கிறோம். அப்படி இருந்து இவ்வளவு மோசமான தோல்விக்கு கட்சித் தலைமையைத் தான் காரணமாக கூறமுடியும். கட்சிக்குள் இரட்டை தலைமைக்கு எதிரான குரல்கள் வலுவாகி உள்ளன. உடனடியாக கட்சியை மீட்கும் வகையில் சில கசப்பான முடிவுகளை எடுத்துத்தான் ஆக வேண்டும். 1996ல் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை அதிமுக சந்தித்ததே கிடையாது. 26 வருடங்களில் அதிமுக சந்தித்த மிக மோசமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி இதுவாகும்.

எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

சட்டசபை தேர்தலிலாவது பாஜக கூட்டணிதான் தோல்விக்கு காரணம் என்று கூற முடிந்தது. ஆனால் இப்போது அதிமுக தனித்து நின்றும் தோல்வி அடைந்து இருக்கிறது. மன ரீதியாக, பண ரீதியாக சோர்ந்து போயிருந்த நிர்வாகிகளை, தொண்டர்களை இரட்டைத் தலைமை ஊக்குவிக்காததே இந்த தோல்விக்கு காரணம். திமுக-வின் எதிர்ப்பு வாக்குகள் மட்டுமின்றி, அதிமுக-வின் வாக்குகளையும் பாஜக அறுவடை செய்கிறது. தமிழகத்தில் அதிமுக-வை பாஜக கரைப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு ஓபிஎஸ்சும் ஒரு காரணம்.

vels media

இனியும் இரட்டைத் தலைமை எடுபடாது. மனக் கசப்புகளை மறந்து சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு தலைமையேற்க வேண்டும். இந்த இரண்டில் ஒரு முடிவை கட்சி எடுத்தே ஆக வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்கள் என நினைத்துக்கொண்டு இருக்காமல், அடி மட்டத்தில் இருந்து கட்சியை மீண்டும் கட்டமைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry