3.20 Minutes Read: அண்ணாமலை என்ற இளைஞரை முன்னிறுத்தி, அவருக்கென மிகப்பெரிய பிம்பத்தை கட்டமைத்தும், தமிழ்நாட்டில் பாஜக அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாதது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு பெரும் சவாலாக உள்ளது.
பாஜக வளர்ந்து வருவது போன்ற தோற்றம் ஏற்படுவதற்கு திமுக மட்டுமே காரணம். இது கூர்ந்து நோக்கப்பட வேண்டிய அரசியல். திமுக இரண்டு விதமான அரசியலை கையிலெடுத்துள்ளது. தேசிய அளவில் சக்திமிக்க தலைவராக உருவெடுப்பதற்கான முன்னெடுப்புகளை ஸ்டாலின் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டப்பை ஏற்படுத்தியது, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்க வேகம் காட்டுவது உள்ளிட்டவை.
நீட் விலக்கு சாத்தியமில்லை எனத் தெரிந்தும், ஆளுநருடன் மோதல்போக்கை கடைப்பிடித்து, தேசிய கவனம் ஈர்த்ததும் பாஜக எதிர்ப்புத் திட்டத்தில் ஒன்றுதான். ஆனால், நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங்களை பெறவும், தேசிய கல்விக் கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் திமுக அரசு தவறவில்லை. அதாவது நிர்வாக நண்பன், அரசியல் எதிரி. இதன் வெளிப்பாடுதான் வெல்கம் மோடி, தனது தலைமையிலான எம்.பி.க்கள் குழுவை சந்திக்காமல் அமித் ஷா தாமதப்படுத்தியதற்கு அவரது வேலைப் பளுவே காரணம் எனக் கூறியது போன்றவையெல்லாம்.
மாநில அரசியலைப் பொறுத்தவரை, திமுகவுக்கு எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான். பேரவைத் தேர்தலில் 65 இடங்களில் வென்ற அதிமுகதான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி. எடப்பாடி அரசு பாஜகவின் அடிமை அரசு, ஊழல் அரசு என போகிறபோக்கில் அவ்வப்போது திமுக விமர்சனங்களை முன்வைக்கும். மற்றபடி, அதிமுகவை எதிர்த்து திமுக அரசியல் செய்வதே இல்லை. மாநில அரசியலிலும் திமுகவின் இலக்கு பாஜகதான். தேசிய முக்கியத்துவம் பெற பாஜக எதிர்ப்பு மட்டுமே கைகொடுக்கும் என திமுக போடும் கணக்கின் மூலம்தான், தமிழகத்தில் பாஜக எப்போதும் பேசு பொருளாக உள்ளது அல்லது பேசு பொருளாகவே வைக்கப்படுகிறது.
Also Read:- இரட்டைத் தலைமையால் பெரும் சரிவு! கரையான் போல அரிக்கும் பாஜக! தலைமை மாற்றத்தை நோக்கி அதிமுக!
திமுக-வும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களும் பாஜக எதிர்ப்பில் மட்டுமே கவனமாக உள்ளனர். தமிழகத்தில் பாஜகவால் ஆட்சி அமைக்கவே முடியாது என மக்களவையில் ராகுல் காந்தி பேசியதும் இந்த ரகம்தான். தலைவர்கள் பேச்சின் தாக்கம் சமூக ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரு கட்சிகளையும் சார்ந்தவர்கள், அனுதாபிகள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்கின்றனர்.
இவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்தி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை ஓரம்கட்டி வைத்துள்ளது திமுக. இந்தக் களேபரத்தில் அதிமுக மட்டுமல்ல, பாமக, நாம் தமிழர், அமமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் குரல்கள் எடுபடவே இல்லை. அதற்கு ஏற்றார்போல பெரு ஊடகங்களும் திமுக தவிர்த்த ஏனைய கட்சிகளை கண்டுகொள்வதே கிடையாது.
இப்படி, திமுக எப்போதும் லைம்லைட்டில் வைத்திருக்கவேதான் பாஜக மீது துளி வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, மாநில தலைவர் அண்ணாமலைக்கான வெற்றி, தோல்வி என்பதாகவே அக்கட்சியினர் கட்டமைத்தனர். 3-வது இடம் கிடைத்துவிட்டதாக பாஜகவினர் கூறும் நிலையில், கள நிலவம் காட்டும் நிதர்சனம் அக்கட்சியினர் கூறுவது போல இல்லை.
மாநகராட்சி தேர்தலில் 2011ல் 4 இடங்கள் பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 22 இடங்களில் வென்றுள்ளது. நகராட்சியை பொறுத்தவரை 2011ல் 37 வார்டுகளிலும் தற்போது 56 வார்டுகளிலும் வென்றுள்ளது. பேரூராட்சி வார்டுகளில் 2011ல் 185ம், 2022ல் 230ம் பெற்றுள்ளது. இதில் நாகர்கோவில் நகராட்சியில் மட்டும் 12 வார்டுகளை பாஜக வென்றுள்ளது. அதேபோல், 180 பேரூராட்சி வார்டுகளை குமரி மாவட்டத்தில்தான் பெற்றுள்ளது. 10 மாவட்டங்களில் ஒரு வார்டுகளில் கூட வெற்றிபெறவில்லை.
அதாவது 2011 தேர்தலைவிட, தற்போது 0.7% இடங்களையே பாஜக அதிகம் பெற்றுள்ளது. இதை எப்படி கட்சி வளருவதாகவும், அண்ணாமலையின் வெற்றியாகவும் கருத முடியும்? அண்ணாமலை என்ற பிம்பம் எடுபடாததும், பாஜகவால் திராவிட பாணி அரசியலை முழுமையாக உள்வாங்கத் தெரியாததையும் இந்தத் தேர்தல் அம்பலப்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்குகளை முழுமையாகப் பெறுவதுடன், திமுக எதிர்ப்பு வாக்குகள் – இன்னமும் ஜெயலலிதா அபிமானிகளாக உள்ள இந்து வாக்குகள் போன்றவை அதிமுகவுக்குச் செல்வதைத் தடுப்பதும்தான் திமுக-வின் கணக்கு. அதை கச்சிதமாக நிறைவேற்றவே, மாநிலத்தில் பாஜக எதிர்ப்பில் வீரியம் காட்டுகிறது திமுக. பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதில் தருகிறது. இதன் அடிப்படையில்தான் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக மார்தட்டுகிறது. பாஜக 4 எம்.எல்.ஏ.க்களைப் பெற அதிமுக உதவியதா? அதிமுக 65 எம்.எல்.ஏ.க்களைப் பெற பாஜக உதவியதா? என்ற விவாதம் இப்போது அர்த்தமற்றது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரை பாஜகவால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை. ஆனால், பாஜக – திமுக கூட்டணியாக இருந்தபோதுதான் ஹெச். ராஜா எம்.எல்.ஏ. ஆனார். இப்போதும் அதிமுக இல்லாமல்தான் தலைநகர் சென்னையில் ஒரு வார்டில் பாஜக வென்றுள்ளது. அதுமட்டுமல்ல திமுக போட்ட கணக்குப்படி சென்னையில் 19 இடங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ஒத்த ஓட்டு பாஜக என திமுகவினர் ட்ரோல் செய்தாலும், ஒட்டுமொத்தமாக திமுக கணக்குப்படியே பாஜக நகர்கிறது அல்லது நகர்த்தப்படுகிறது. எனவேதான் கட்சியை லைம் லைட்டில் வைத்திருக்கும் திமுகவுக்கு, தமிழக பாஜக மேல்மட்ட நிர்வாகிகள் மனதார, மனதுக்குள் நன்றி சொல்கின்றனர்.
மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன, தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் எவை? போன்றவை பயனாளிகளுக்கே தெரியவில்லை. அந்த அளவில்தான் தமிழக பாஜக செயல்படுகிறது. வாக்காளர்களுக்கு காசு கொடுத்தார்ககள், பரிசுப் பொருள் கொடுத்தார்கள், அதன் மூலம்தான் அவர்கள் வென்றார்கள் என்பதெல்லாம் சப்பைக்கட்டு. மத்தியில் ஆளும் நீங்கள் ஒன்றும் இல்லாதவர்களா? என மக்கள் கேட்டால்…?
Also Read:- சென்னை மேயராகிறார் மாஜி எம்.எல்.ஏ. செங்கை சிவம் மகள்? துணை மேயருக்கு இரண்டு பிரபலங்கள் இடையே போட்டி!
தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. இனி அது நாய் வாலை நிமிர்த்தும் கதைதான். நிர்வாகிகளால் கைக்காசப் போட்டு எவ்வளவு செலவழிக்க முடியும். திராவிடக் கட்சிகள் கொடுத்துப் பழக்கிவிட்ட நிலையில், பாஜக போன்ற பணக்கார கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளாகட்டும், வாக்காளர்களாட்டும் எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ‘ஜி’ அரசியல் எடுபடாது. ஆளும் கட்சி சார்பு ஊடகர்களை எதிர் கேள்வி கேட்பது மட்டும் அரசியல் ஆகிவிடாது. அண்ணாமலையின் தலைமை இளைஞர்களை ஈர்க்கிறது என்பதை மறுக்க முடியாது, ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை அல்லது மாற்றப்படவில்லை.
உள்கட்சி அரசியலைத் தாண்டி, கட்சி வளர்ச்சிக்கு அயராது உழைத்த தமிழிசையின் அரசியல் பயணத்தை ஆளுநர் என்ற பதவி கொடுத்து முடித்து வைத்தது பாஜக தலைமை. அதேபோல், வேல் யாத்திரை மூலம் கட்சி மீது கவனம் பதியும் அளவுக்கு செயல்பட்ட எல். முருகனின் அரசியல் பயணத்தை, மத்திய இணை அமைச்சர் என்ற பதவி மூலம் முடித்து வைத்தது பாஜக தலைமை. இப்போது அண்ணாமலை….?
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry