உக்ரைன் மீது போர் தொடங்கியது ரஷ்யா! முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை! பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

0
388
Russia Ukraine War

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனை தாக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசப்படுவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். ரஷ்யாவால் கைப்பற்றப்படும் முதல் நகரமாக இது இருக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. விமான நிலையங்கள் தொடங்கி உக்ரைன் நாட்டின் துறைமுகங்களை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்ய படைகள் தீவிரமாக உள்ளன. கருங் கடலை ஒட்டியுள்ள முக்கியமான துறைமுகங்களை கைப்பற்ற தீவிரமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் 5 போர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்ட்ரை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

velsmedia

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள அதிபர் புதின், அந்த 2 பிராந்தியங்களில் மட்டும் ரஷ்யப்படைகள் அமைதி காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யப்படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை புதின் வழங்கியுள்ளார்.

விளாதிமிர் புதின் – ஜோ பிடன்

“எங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிற நாட்டினர் யாராவது தலையிட்டால், அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும்” என ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக எச்சரித்திருக்கிறார். ‘உக்ரைனை ஆக்கிரமிப்பது ரஷ்யாவின் நோக்கமல்ல, அங்கு அமைதியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். நேட்டோவில் உக்ரைனை சேர்க்க கூடாது என்ற எங்கள் கோரிக்கையை அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் ஏற்கவில்லை’ என்றும் விளாதிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் போர் - வேல்ஸ் மீடியா

ரஷ்யாவின் போர் முடிவுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. “இந்த தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பு. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான முறையில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்பேற்க வைக்கும். ரஷ்ய ராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளான உக்ரைன் மக்களுக்கு இன்று இரவு முழு உலகத்தின் பிரார்த்தனைகள் உடன் இருக்கும்.” என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியிருக்கிறார்.

“உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ளும் மற்றும் வெற்றி பெறும். உக்ரைன் மீது முழு அளவிலான போரை புதின் தொடங்கியுள்ளார். இது ஆக்கிரமிப்புப் போர். புதினை உலக நாடுகளால் தடுக்க முடியும் மற்றும் தடுக்க வேண்டும்” என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் Dmytro Kuleba கூறியுள்ளார்.

ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக நல்லுறவில் இருந்து வரும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ரஷ்ய அதிபர் மற்றும் உக்கிரைன் அதிபரிடம் பேச வேண்டும்” என இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. ரஷ்யா- உக்ரைன் போர் சூழ்நிலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது. விரைவில் அமைதி ஏற்படும் என நம்புவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், நேட்டோ கூட்டணி நாடுகளின் தலைவர்களுடனும் அமெரிக்க அதிபர் பைடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். உக்ரைனில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பகுதிகளில் 30 நாட்களுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Vels Media
Ukraine

உக்ரைன் மீது ரஷ்யா போரினை தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 அதிகரித்தது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தொட்டுள்ளது.

Sensex Velsmedia

உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால், 044-28515288 / 96000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என்றும் தமிழக அரசின் அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளையும் மீறி ரஷ்யா இந்த தாக்குதலை நடத்த இரு முக்கியக் காரணங்கள் உள்ளது. உக்ரைன் நோட்டோ அமைப்பில் சேர்ந்து விட்டால், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகிவிடும் என்பதால், அந்நாட்டை மிரட்டி, உருட்டி, தனது கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா முயற்சிக்கிறது. மற்றொரு காரணம், உலகளவில் வலிமையான ராணுவ கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் 2வது நாடாக ரஷ்யா உள்ளது. அதன் மீது கொண்ட அதீத நம்பிக்கையே, உலக நாடுகளை எதிர்த்து இந்தப் போரை அதிபர் புதின் துவக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry