பெண் கருவுறும்போது, அவரது உணவுப் பழக்க வழக்கம், உடல் செயல்பாடுகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதே பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கு மதுப்பழக்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி யாரும் கவனிப்பதில்லை. ஆனால் தந்தையின் மதுப்பழக்கம் கருவில் இருக்கும் குழந்தை மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
கருவில் இருக்கும் குழந்தையின் தந்தையுடைய குடிப்பழக்கம் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்வது இல்லை. கருவுறுதல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியானது பெண்களையே மையமாகக் கொண்டது. உண்மையில் கருவை பாதிக்கும் சாத்தியமான பிரச்னைகளை பற்றி ஆண்கள் தரப்பில் அதிக ஆய்வுகளை நடத்தவில்லை. குழந்தையின் ஆரோக்கியத்தில் தந்தையின் பங்கை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உடலியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
‘கர்ப்ப காலத்தில் நான் ஒருபோதும் குடித்ததில்லை, ஆனால் என் குழந்தைக்கு மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறு (Foetal Alcohol Spectrum Disorders – FASD) உள்ளது. எனது கணவர்தான் நாள்பட்ட மதுபழக்கம் கொண்டவர்’ என்று கூறுவதை மருத்துவர்கள் உறுதிசெய்கிறார்கள். சமீபத்திய ஆராய்ச்சியானது, கணவருக்கு மதுப் பழக்கம் இருந்தது என்று சொன்ன தாய்மார்களின் கூற்றுக்கும், குழந்தைகளின் உடல்நலனுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறுகிறது.
மதுப்பழக்கம் உள்ள தந்தைகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்குப் பல்வேறு மோசமான உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனாவில் 2021இல் 5 லட்சத்துக்கும் அதிகமான தம்பதிகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் கருத்தரிப்பதற்கு முன் கணவருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், பிறக்கும் குழந்தைக்கு மேல்வாய்ப் பிளவு (cleft palate), பிறவி இதய நோய், செரிமான மண்டலத்தில் கோளாறுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகளின் ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கருவை சுமக்கும் தாய் கர்ப்ப காலத்தில் மது அருந்தவில்லை என்றாலும் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.
சீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், மனைவி கருத்தரிப்பதற்கு முன் மூன்று மாதங்களில், கணவர் ஒரு நாளைக்கு 50 மில்லிக்கு மேல் மது அருந்தி இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே இதயக் கோளாறு ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. தந்தையின் குடிப்பழக்கம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் போன்றவற்றுடன் தொடர்பு உடையதாகவும் உள்ளது.
பிறப்புக் குறைபாடுகளின் ஒட்டுமொத்த ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றாலும், மதுப்பழக்கம் இல்லாத தந்தைகளை ஒப்பிடுகையில், மதுப்பழக்கம் இருக்கும் தந்தைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல்வாய்ப் பிளவு பிரச்னை ஏற்படும் அபாயம் 1.5 மடங்கு அதிகம். தந்தையின் குடிப் பழக்கம் 31.0 சதவிகிதம் பிறப்புக் குறைபாடுகளை அதிகரிப்பதால், எதிர்கால தந்தைகள் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் மைக்கேல் கோல்டிங் கூறும்போது, “நீண்ட கால மது அருந்தும் பழக்கம் விந்தணுவில் உள்ள மரபுவழி ஆர்என்ஏ-களின் விகிதத்தைப் பாதிக்கிறது, தந்தை ஆல்கஹால் உட்கொள்வதால் அவரின் குழந்தைக்கு ஏற்படும் எபிஜெனெடிக் தாக்கங்கள் (epigenetic effects) பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது” என்கிறார்.
Also Read : ரயில் பயணத்துக்கு காப்பீடு இருப்பது தெரியுமா? வெறும் 35 பைசாதான்… ரூ.10 லட்சம் வரை இழப்பீடு!
அதேநேரம், கருவுற்றிருக்கும் பெண் கர்ப்ப காலத்தில் மது அருந்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்தாகவே உள்ளது. வாரம் ஒருமுறை மது அருந்தினாலும், அது குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவாற்றல் செயல்பாடு, நடத்தை மற்றும் முக வடிவத்தைப் பாதிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
“கருவுற்ற பெண்ணின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் நஞ்சுக்கொடியின் வழியாக நேரடியாக கருவுக்குள் செல்கிறது, எனவே இது வளர்ச்சியில் மிகவும் நேரடியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தின் குழந்தை மற்றும் இளம்பருவ சுகாதாரப் பேராசிரியரும் குழந்தை மருத்துவருமான எலிசபெத் எலியட் கூறுகிறார்.
கர்ப்பிணிப் பெண் மது அருந்துவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சாத்தியமான பிரச்னைகளில் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள், முக அம்சங்களில் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அவை மது அருந்துவதால் கருவில் ஏற்படும் கோளாறுடன் (foetal alcohol spectrum disorders – FASD) தொடர்புடையவை. நடத்தை, அறிவாற்றல் மற்றும் கற்றல் சிக்கல்களும் இதில் அடங்கும். கருவின் வளர்ச்சிக்கு ஆண், பெண் இருவரது ஆரோக்கியமும் முக்கியம். குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரு தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry