
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
யானைகள் காடுகளையும், புல்வெளிகளையும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை விதைகளை தாங்கள் செல்லும் வழியெங்கும் விதைக்கின்றன. இதனால் பல காடுகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் செரிமான மணடத்தால் காடுகள் செழிக்கின்றன.
நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் நைல் நதிக்கரைகளில் மெயெரித்திரியம் என்ற விலங்கு தோன்றியது. அது ஒரு பன்றியின் அளவாக இருந்தது. அதில் இருந்து இன்றைய யானைகள் உருவாகியதாக உயிரியலாளர்கள் கூறுகின்றார்கள். உலகில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவைதான்.
ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்பிரிக்க யானைகள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மனிதர்களைப் போல யானைகளும் குறிப்பிட்ட யானையைப் பெயர் சொல்லி அழைத்து, அதற்கு செய்தியைக் கூறுகின்றன என தெரியவந்துள்ளது. யானைகள் பாசாங்கோ, மிமிக்ரியோ செய்யாமல், தனித்துவமான ஒரு பிளிறலை வெளிப்படுத்தி அழைக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.
“பிளிறல்கள், எக்காளம் போன்ற மனிதர்கள் கேட்கக்கூடிய ஒலிகள் தவிர்த்து நம்மால் கேட்கமுடியாத இன்ஃப்ராசோனிக் ஒலிகள் மூலமாகவும் யானைகள் தொடர்புகொள்ளும். எனவே இந்த ஆய்வு முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை” என்கிறார் வனவிலங்கு ஆய்வாளர், டாக்டர் லக்ஷ்மிநாராயணன். மத்திய அரசின் வனஉயிர் நிறுவனத்தில் (Wildlife Institute of India) பணிபுரிந்து வரும் லக்ஷ்மிநாராயணன், “யானைகள் பொதுவாக தன் குழுவில் இருக்கும் பிற யானைகளைப் பார்த்துதான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும். ஒலி மூலம் மட்டுமல்லாது, சிறுநீர், மதநீர், சாணம் மூலமாகவும் அவை தகவல்கள் பரிமாறிக் கொள்ளும்” என்று கூறினார்.
யானைகளை வியந்து பார்பதற்கும், அவற்றின் மீது ஏறி அம்பாரி செல்வதற்கும் நம்மில் எத்தனையோ பேர் ஆசைப்பட்டதுண்டு. யானைகள் நண்பர்களாய் பழகுவதையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதிக ஞாபக சக்திக்கு பெயர் போன யானைகள், குழந்தைகளை விடவும் மென்மையான குணத்தை கொண்டிருப்பன. அவற்றை நாம் தொந்தரவு செய்யாதவரை, யானைகள் நம்மை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை.
தமிழகத்திற்கும் யானைக்கும் நெருங்கிய பண்பாட்டுத்தொடர்பு உண்டு. தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள். இத்தனை பெயர்களே நமது வாழ்வில் யானையின் நெருங்கியத் தொடர்புகளைத் தெரிவிக்க சான்றாகும். யானை/ஏனை (கரியது), வேழம் (வெள்ளை யானை), களிறு, களபம், மாதங்கம், உம்பர், அஞ்சனாவதி, அறுபடை, ஆம்பல், ஆனை, இரதி, குஞ்சரம் இப்படி ஏராளமான பெயர்களில் ஆண் யானைகள் அழைக்கப்படுகின்றன. பெண் யானைகளுக்கு பிடி, அதவை, வடவை, கரிணி என்று பெயர்கள் உண்டு.
மனிதனைப் போலவே யானைகளும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றன. யானை 22 மாதங்கள் கருவைச் சுமக்கிறது. மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் யானைகளால் ஓட முடியும். பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை ஆகும். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்த போதிலும் யானையைப் போன்று துணிச்சலானது என்று சொல்லிவிட முடியாது. யானை சுறுசுறுப்பானது அத்துடன் பெருந்தன்மை மிக்கது.
Also Read : மழைக்காலத்தில் Heart Attack வர இந்த 10 உணவுகள்தான் காரணம்! இறைச்சி, மீன் சாப்பிட உகந்ததா?
யானையிடம் நீங்கள் அன்பு காட்டினால் அதனை எப்போதும் அது மறப்பதில்லை. பத்து, இருபது வருடங்கள் சந்திக்காமல் இருந்தாலும் அது உங்களை அடையாளம் கண்டு சந்தோஷப்படும். உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது. தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும். நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே யானைகளின் மூளை மிகப் பெரியது. யானைகளால் கண்ணாடியில் தங்களை அடையாளம் காண முடியும், இது ஒரு சில விலங்குகளால் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு பண்பு. யானைகள் சிறப்பாக நீச்சல் அடிக்கும். ஆறு நிமிடங்கள் வரை அவைகளால் மூச்சைப் பிடிக்க முடியும்.
ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும். யானை துதிக்கையின் மூலம் 8 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். உணவையும், நீரையும் ஒரே இடத்தில் பெற முடியாது என்பதால் அவை 40 முதல் 50 கி.மீ. வரை பயணிக்கும்.
யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டூசியை கூட எடுத்துவிடும். யானைகள் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும். யானையின் communication பூனையை போன்றே இருக்கும். பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான். பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும். யானைகள் சிக்கலான சமூக கட்டமைப்புகள் மற்றும் வலுவான குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளன. யானைகள் தங்களது கூட்டத்தை சேர்ந்த சக யானைகள் இறந்தால் துக்கம் அனுசரிக்கும்.
நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும். யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான். ஆன்மீகத்திலும் யானைக்கு முக்கிய இடமுண்டு. விநாயகர் போலவே யட்சிணிகளில் விநாயகி உண்டு, ஆதி மதமான ஆசிவகத்தில் யானைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன.
யானைகள் தந்தததுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குவதால் காட்டு யானைகள் தங்களின் வாழ்விடத்தை இழந்து வருகின்றன. அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் யானைகளையும் அழிந்து வரும் இனத்தில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஆப்ரிக்காவில் முன்னர் லட்சக் கணக்கில் இருந்த யானைகள், தற்போது ஆயிரக்கணக்கில் தான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், இனி வரும் சந்ததியினர் யானைகளை கார்டூனாகவும், அனிமேசன் படத்திலும் தான் பார்க்க முடியும்.
உதகை அரசு கலைக் கல்லூரியில் 12 ஆண்டுகளாக, காட்டுயிர் உயிரியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் பி.ராமகிருஷ்ணன், “2010ஆம் ஆண்டில் மத்திய அரசு, யானையை ‘தேசிய பாரம்பரிய விலங்காக’ அறிவித்த பிறகுதான் யானைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவேதான் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதும் இயற்கையைப் பாதுகாப்பதும் வேறில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது” என்கிறார் .
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry