கொரோனாவை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஒரு பகுதியில் 14 நாட்கள் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்.
குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் 10 சதவீதத்தை தாண்டினாலோ அல்லது ஆக்சிஜன் படுக்கை வசதியில் 60 சதவீதம் நிரம்பினாலோ அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தலாம். மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். தொற்றால் பாதிக்கப்படுவோரில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் திங்கட்கிழமையிலிருந்து விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். மற்ற மாநிலத்தைவிட நமது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மக்கள் வெளியே வரக்கூடாது.
நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து உள்ளே வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். போதுமான படுக்கை வசதிகள் நமக்கு இருந்தாலும், 12 ஆயிரம் கூடுதல் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளும் அமைக்கப்படவுள்ளன. இந்த முறை ஒரே வீட்டிலுள்ளவர்களுக்குத்தான் தொற்று வேகமாக பரவுகிறது. எனவே வீட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துவரும் ஒருவர், ஆர்டி–பிசிஆர் சோதனை முடிவு, ஆக்சிஜன் உதவியில் இருப்பதற்கான ஆவணம் உள்ளிட்ட 3 சான்றுகளை கொடுத்தால் அந்த நோயாளியின் உறவினருக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்துக்கான சிறப்பு மையம் விரிவுபடுத்தப்படும்” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry