விளையாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டது யோகாசனம்! வாழும் கலைக்கு அங்கீகாரம் என விளையாட்டு ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!

0
10
VARANASI, INDIA - APRIL 23: Young Indian Hindu Brahmins training to be priests perform yoga on a ghat on the Ganges River, holy to Hindus, at sunrise on April 23, 2014 in Varanasi, India. (Photo by Kevin Frayer/Getty Images)

யோகாசனக் கலையை விளையாட்டு போட்டிப் பிரிவில் சேர்த்து மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் யோகாசன விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையே யோகாசனம் என்று அழைக்கப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் யோகா முக்கிய பங்கு வகிப்பதால், உலகம் முழுவதிலும் அனைத்து வயதினர் இடையேயும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பழம்பெருமை மிக்க யோகக் கலைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டாலும், இதுவரை மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், யோகாசனத்தை விளையாட்டுப் போட்டிகள் பிரிவில் சேர்த்து மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் மத்திய விளையாட்டு, இளைஞர் நலத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோர் முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் யோகாசனத்தை விளையாட்டுப் போட்டி பிரிவில் சேர்க்க மத்திய அரசு அங்கீகாரம் அளித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலோ விளையாட்டுப்போட்டிகளில் யோகாசனம் சேர்க்கப்பட உள்ளது. யோகாசனத்துக்காக மொத்தம், 7 பிரிவுகளில் 51 மெடல்கள் கொடுக்க விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து, பாரம்பரிய யோகாசனம், ஒற்றையர் கலை யோகாசனம், இரட்டையர் கலை யோகாசனம், தாள யோகாசனம், குழு யோகாசனம் மற்றும் சாம்பியன்ஷிப் யோகாசனம் ஆகிய பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகாசனக் கலையை விளையாட்டு போட்டிகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் யோகாக்கலை போட்டிகளுக்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதனால் பிற, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள், இனி யோகாக்கலை பயின்றவர்களுக்கும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் யோகா சேர்க்கப்பட்டுள்ளதால் மக்களிடையே யோகாக்கலை மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry