விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது ரோவர்! 2 வாரங்களுக்குத் தென்துருவத்தில் ஆய்வு! சந்திரயான்-3 மிஷன் பூரண வெற்றி!

0
50
Image Credit : BSEHExam.org

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் நேற்று (ஆக.23) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வருகிறது. ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில், தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வெளியே வந்து, அதன் வாயிலாக ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்குவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் விடிய விடிய கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ரோவர் நிலவின் மேற்பரப்பில் உலாவரத் தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடையுள்ள இந்தச் சிறிய ரோவர்தான் முக்கியமான ஆய்வுகளை நிலவில் செய்யப்போகிறது.

இஸ்ரோ பதிவு செய்துள்ள டிவீட்டில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நிலவுக்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வழியாக பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயில்கிறது! அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்…” என்று தெரிவித்துள்ளது.

ரோவர் நிலாவில் நிலவில் உலாவரத் தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர். இதன் மூலம் சந்திரயான்-3 மிஷன் பூரண வெற்றி பெற்றுள்ளது. நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ. என்ற வேகத்தில் ரோவர் நகரும்.

நிலவில் லேண்டர் தரையிறங்கியதும், பிரக்யான் ரோவர் உலா வரத் தொடங்கியதும், நிலவின் காலைப் பொழுதாகும். சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும். இதில் பகல் பொழுது நீடிக்கும் 14 நாட்கள் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.

இந்த 14 நாட்கள் ரோவர் பல குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது.

அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவுக்காலம் நீடிக்கும் அந்த இரண்டு வாரமும் நிலவும் உறைபனிக் குளிரால் லேண்டர், ரோவரின் பாகங்களில் விரிசல்கள் விழலாம். அவற்றின் கட்டமைப்பிலேயே கூட சேதங்கள் ஏற்படக்கூடும். எனவே தரையிறங்கிக் கலம், உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் ஆயுட்காலம் 2 வாரங்கள்தான்.

Also Read : பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1

விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் எழும்பிய புழுதி அடங்கிய பிறகு நிதானமாக வெளியே வந்த பிரக்ஞான் ரோவர், தான் செல்லும் வழியிலுள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும். நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அது தரவுகளை அனுப்பும். நிலவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் ரோவர் மேற்கொள்ளும்.

அதாவது, மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா? என்பன போன்ற தகவல்களை ரோவர் சேகரித்து அனுப்பும். மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்தும் ரோவர் ஆய்வு செய்யும்.

நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன? என்பதை அதனால் கண்டறிய முடியும்.
ஊர்திக்கலனான விக்ரம் லேண்டர் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை ரோவர் கண்டுபிடிக்கும்.

நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளை தெரிந்துகொள்வது இஸ்ரோவுக்கு அவசியமாகிறது. இதற்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன? என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆய்வுக்காக அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்தக் கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும். அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன? என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும்.

Also Read : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!

பிரக்ஞான் ரோவரில் உள்ள சக்கரங்களும் ஒரு முக்கிய வேலையைச் செய்கின்றன. ரோவர் முன்னோக்கி நகர்ந்துகொண்டே ஆய்வுகளைச் செய்யும்போது, அதன் ஆறு சக்கரங்களும் நிலாவின் தரைப்பரப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவை நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கும்.

எதிர்காலத்தில் மற்ற கோள்களுக்கு மனிதர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது, நிலவை ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட இது உதவும். இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம். பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள், இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும். எதிர்காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்கு இந்த ஆய்வுகள் உதவலாம். அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும், லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இஸ்ரோவை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry