வார விடுமுறை தினம் என்றாலே ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் வழிபாட்டுக்கு வசதியாக நிர்ணயித்துக் கொண்டதொரு தினத்தை, நாம் ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்?
இந்து மரபுப்படி வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக் கிழமையை, கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தினம் – வழிபாட்டுத் தினம் என்பதாலேயே நிராகரித்திட வேண்டுமா? என்றால், சர்வ நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூரியனின் நாளான ஞாயிறும் போற்றத்தக்க நாள்தான். ‘ஞாயிறு’ என்ற பெயர் மேற்கத்திய, மிகப் பழமையான ஹெலனிஸ்டிக் ஜோதிடத்திலிருந்து வருகிறது. அதன்படி, சனி, வியாழன், செவ்வாய், சூரியன், வீனஸ், புதன் மற்றும் சந்திரன் என அழைக்கப்படும் ஏழு கிரகங்களும், ஒரு நாளின் ஒரு மணிநேரத்தைக் கொண்டிருந்தன. இவற்றில், சுழற்சியில் முதலில் வரும் ஒரு மணிநேரம் எந்தக் கிரகத்தை குறிக்கிறதோ(ஆரம்ப ஓரை), அந்தப் பெயரில் அது அழைக்கப்பட்டது.
சூரிய வழிபாடு, பழைமையான வழிபாடுகளில் ஒன்று. சௌமாரம் என்று தனி வழிபாடாகவே இது இருந்தது. பழைமையான ஆலயங்களும், வேத இதிகாசங்களும் இதற்குச் சான்றுகளாக உள்ளன. சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் புராணம் அழைக்கிறது.
அதேபோல், உலகின் பண்டைய நாகரிகங்களில் பெரும்பாலானவை, சூரியக் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. எனவே சூரியனை வணங்க ஏதுவாக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருந்தது. இன்னமும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது நாம் சூரியனைத்தான் வழிபடுகிறோம். இதுபோன்ற சுவாரஸ்யங்கள், புனைவுகள் அடங்கியதுதான் ஞாயிறு.
இப்படியான நிலையில், இந்தியாவில், மொகலாயர்கள் ஆட்சி செய்தபோது, அவர்கள் வழிபாட்டுக்கு ஏதுவாக வெள்ளிக் கிழமையை வார விடுமுறை தினமாக அறிவித்தனர். பின்னர் பிரிட்டிஷார் ஆட்சியில், அவர்கள் தேவாலய பிரார்த்தனைக்குச் செல்ல வசதியாக ஞாயிற்றுக் கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தனர்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது, இந்தியத் தொழிலாளர்கள் வாரத்தின் 7 நாட்களும் பணி செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்தியக் கலாச்சார, பாரம்பரியத்துக்கு உள்பட்டு, அந்தந்த கடவுளர்களுக்கு உரித்தான தினங்களில் அவர்கள் வழிபாடு செய்யவும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. மாறாக, பிரிட்டிஷ் அதிகாரிகளும், ஊழியர்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுகளில் வழிபாடு செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நல்ல வெள்ளியில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ஜீஸஸ் கிரைஸ்ட், மீண்டும் ஞாயிறன்று உயிர்த்தெழுகிறார். எனவே ஞாயிற்றுக் கிழமையை புனிதமாகக் கருதும் கத்தோலிக்கர்கள், அந்த நாளையே பிரார்த்தனைக்கான தினமாக அறிவித்தனர். எனவே, கிறித்தவர்களின் ஆளுகைக்கு உள்பட்ட நாடுகளில் ஞாயிறுதான் வார விடுமுறை நாளாகும்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஞாயிறு தான் விடுமுறை நாளாக இருந்து வருகிறது.இந்தியாவில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என 1843-ல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் உத்தரவு பிறப்பித்தார். அடுத்த ஆண்டே பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிறுதான் விடுமுறை நாள் என ஆங்கிலேயே அரசாங்கம் அறிவித்தது. 1858-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு கீழ் முழுமையாக வந்தது. இங்கிருந்த ஏராளமான மில்களில் இந்தியத் தொழிலாளர்கள் வார விடுமுறை இல்லாமல் உழைத்தனர். உழைப்புச் சுரண்டல் இருந்த அந்தத் தருணத்தில், தொழிலாளர் இயக்கங்களின் தந்தையென போற்றப்படும் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத் தலைவர் நாராயண் மெகாஜி லொகாந்தே (மராத்தியர்), சமூகத்துக்கு வேலை செய்வதற்கும், ஓய்வுக்கும், ஒருநாள் விடுமுறை வேண்டும் என்று 7 ஆண்டுகள் போராடினார். இதன் பலனாக 1890ம் ஆண்டு ஜூன் 10 அன்று ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. தற்போது துறை சார்ந்து இது வேறுபடுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடிவிட்ட நிலையில், வாழ்க்கைச் சூழல் மட்டுமல்லாது, மதம் மற்றும் ஆன்மிகச் சூழலும் மாறியுள்ளது. இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. அங்கு பணியாற்றுவோருக்கு, அந்த நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் வார விடுமுறை தினம்தான் பொருந்தும். அது பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமையாகவே இருக்கும். இந்தப் பணியாளர்கள், சொந்தப் பணி நிமித்தமாக அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டி வந்தால், அவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்துச் செல்ல வேண்டும். வாழ்க்கைச் சூழல் மாறியிருப்பதை இதன் மூலமாகவே உணரலாம்.
கடவுள் அனைத்திலும் இல்லை, ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்பதுதான் நமக்கு கற்பிக்கப்பட்ட பாடம். எனவே, கடவுளர்களை வழிபட கிழமை ஒரு தடையாக இருக்காது என்றபோதிலும், மதம் மற்றும் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயமாக இது மாறிவிட்டது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் அம்மனுக்கு உகந்த தினங்களாகவும், திங்கள் கிழமை சிவனுக்கான தினமாகவும், சனி மற்றும் புதன் கிழமைகள் பெருமாளுக்கான நாளாகவும், வியாழக் கிழமை குரு பகவானுக்குரிய நாளாகவும் மக்கள் மனதில் அழுந்தப் பதிந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக இந்த நம்பிக்கை இருந்து வந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள அல்லது ஏற்பட்டு வரும் ஆன்மிகப் புரட்சி, இதற்கான தேவையை அதிகரிக்கிறது.
நமது பாட்டன், பூட்டன் காலங்களில் நகர மயமாதல் இல்லை, இயந்திரத்தனமான வாழ்க்கை இல்லை. சத்தான உணவை உண்டு, திடமான மனதுடன், நினைத்த நாட்களில் கோயில்களுக்கு சென்று வந்தனர். தற்போதோ, உச்சபட்ச நகர்மயமான பல மாநிலங்களில், தொழில்துறை பாய்ச்சல் எடுத்துள்ளது. நிறுவனங்களில் பணிபுரிவோர் ஆகட்டும், அவர்களது குடும்பத்தினர் ஆகட்டும், தங்களது மனம் பற்றிய கடவுளர்களை, அவர்களுக்கான தினங்களில் சென்று தரிசிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதன் மூலம் மனம் இலகுவாவதாக அவர்கள் நம்புகின்றனர். கோயில் என்பது அவர்களது மன பாரங்களை இறக்குவதற்கான வடிகாலாக உள்ளது.
ஈரான், பெஹ்ரைன், ஈராக், ஏமான், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், லிபியா, சிரியா, சூடான், சவுதி அரேபியா, ஓமன், எகிப்து, வங்கதேசம், ஆப்கன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இன்னமும் வெள்ளிக்கிழமைதான் வார விடுமுறையாகும். கிறிஸ்தவர்களின் ஆளுகைக்கு உள்பட்ட நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருக்கிறது. இந்தியாவில் ஆன்மிகம் எழுச்சி பெற்று வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஆன்மிகம் வளர்ந்தால் தான் சேவை மனப்பான்மை வளரும். இதற்கு ஏற்றார்போல, வார விடுமுறையை ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக, வேறு கிழமைக்கு மாற்றலாம்.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 79.8% பேர் இந்துக்கள். இஸ்லாமியர்கள் 14.23%, கிறிஸ்தவர்கள் 2.3%, சீக்கியர்கள் 1.72%, புத்த மதத்தவர்கள் 0.7%, ஜைனர்கள் 0.37%. இதன் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மதமான சீக்கியம், தனக்கான பிரத்யேக வழிபாட்டு நாளாக எதையும் வரித்துக்கொள்ளவில்லை. நாட்டின் இரண்டாவது பெரிய மதமான இஸ்லாம், தினமும் ஐந்து வேளை தொழுகையை வலியுறுத்துகிறது. அதேநேரம், வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசல் தொழுகைக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையை வழிபாட்டு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அன்றைய தினம்தான் இந்தியாவில் வார விடுமுறை.(அட்வென்ட் அன்ட் கிறிஸ்டியன் இயக்கத்தை சார்ந்தவர்கள் சனிக்கிழமைதான் வழிபாடு செய்வார்கள்)
எனவே, கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதை ஏற்கும்போது, சனிக் கிழமையை வார விடுமுறை தினமாக ஏற்பதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கப்போவதில்லை. 5 நாள் வேலை, 2 நாள் விடுமுறை என்ற அடிப்படையில், வெள்ளி, சனி என்பது வார விடுமுறை அல்லது வார இறுதி நாட்களாக இருக்கலாம். வெள்ளிக்கிழமை என்பது இந்துக்களுக்கு மட்டும் புனித நாள் அல்ல, இஸ்லாமியர்களுக்கும் தான். பள்ளிவாசல்களில் அவர்கள் 5 வேளை தொழுகைக்கு ஏதுவாக இது இருக்கும். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதி மாதம் 15ந் தேதி சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது? அது மாத இறுதிக்கோ அல்லது முதல் தேதிக்கோ மாற்றப்பட்டதை யாரும் எதிர்க்காத நிலையில், வார விடுமுறை மாற்றத்தை எப்படி எதிர்க்க முடியும். வார விடுமுறை நாளை மாற்றினால், மதம், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு புத்தூக்கம் தருவதாக அமையும்.
தமிழர் மரபு, இந்திய மரபு, யூதர்களின் ஹீப்ரு மற்றும் கிறிஸ்தவ நாட்காட்டிகளின்படி வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை, ISO 8601ன் படி வாரத்தின் ஏழாவது நாளாகும். ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறைதினம் என இந்திய அரசு எந்தவொரு அறிவிக்கையையும் வெளியிடவில்லை என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.
– பத்திரிகையாளர் ‘கோ’
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry