பொம்மை ஆட்சி செய்கிறார் ஸ்டாலின்! சைக்கிள் ஓட்டுவதை பார்க்கவா வாக்களித்தோம்? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

0
98

முதலமைச்சர் ஸ்டாலின் முதல் நாள் டீக்கடையில் டீ குடிப்பது போலவும், மறுநாள் நடைபயணம், சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போல செய்தி வருவதாகவும், இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள் என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, “திமுக ஆட்சியில் 8 மாத காலம் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் முடிவுற்ற திட்டங்களையே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தொடங்குகிறார். திமுகவில் கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்துள்ளார்கள். இந்த அரசு கொள்ளை அடிப்பதையே பிரதானமாக கொண்டு செயல்படுகிறது.

பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2,500 கொடுத்தது அதிமுக அரசு. பொங்கல் தொகுப்பினை தரமானதாக வழங்கியது அதிமுக அரசு. அப்போது ரூ.5,000 கொடுக்க சொன்ன மு.க.ஸ்டாலின், தற்போது எதுவுமே வழங்கவில்லை. இப்படி மக்களின் வயிற்றில் அடித்த கட்சியாக இருக்கிறது தி.மு.க. சர்வாதிகார அரசாங்கமாகவும் திமுக உள்ளது. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

கட்சியை உடைக்க அதிமுக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்கு போடுகிறார்கள். ராஜேந்திர பாலாஜி மீதும்கூட, வேண்டுமென்றே வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் மீது போடப்பட்ட வழக்கு வேடிக்கையாக உள்ளது. நாங்கள் இதுபோன்ற எதற்கும் அஞ்ச போவதில்லை. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. ஒரு பொம்மை முதலமைச்சர் போல ஆட்சி செய்கிறார் ஸ்டாலின். சொல்லப்போனால் மக்கள் பிரச்சனைகளை விட தன் சொந்த வேலை மட்டுமே பார்க்கிறார்.

திமுக ஆட்சி வந்து இவ்வளவு மாதங்கள் ஆகியும், நீட் தேர்வு ரத்து என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். ஆனால் அதனை ரத்து செய்தாரா? அதுமட்டுமா? 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் இங்கு குறையவில்லை. தற்போது வரை இதற்கு பதில் இல்லை. அந்த வகையில் சொல்வது ஒன்று செய்வது ஒன்று தான் இந்த அரசு. லஞ்சம் இல்லாத துறையே இங்கு இல்லை என்பதும் வேதனை.

ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது படத்துடன் பத்திரிகைகளில் செய்தியாக முதல் நாள் வருகிறது. மறுநாள் நடைபயணம் சென்றார் என செய்தி வருகிறது. அதன் பிறகு சைக்கிள் ஓட்டுகிறார். உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்கிறார். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு உங்களை முதல்வர் ஆக்கினார்கள். இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்?.

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதல்வர் ஆனவர் ஸ்டாலின். இப்படி செய்தவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்?. நிச்சயம் செய்ய மாட்டார். நாம் உருவாக்கிய திட்டங்களுக்கு தான் அவர் அடிக்கல் நாட்டுகிறார். வேறு எதையும் இதுவரை தி.மு.க அரசு செய்யவில்லை. தி.மு.க ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அவர்களிடம் தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry