அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டிபேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் 35 கிளைகளுடன், சுமார் 4000 ஊழியர்களுடன் இயங்கி வரும் சிட்டி வங்கி, நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், எதிர்பார்த்த வளர்ச்சியை எட்ட இயலாததன் காரணமாக, இந்தியா உள்பட 13 நாடுகளில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேற சிட்டி வங்கியின் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஃப்ரோஸ் முடிவெடுத்துள்ளார். சிங்கப்பூர், லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங் காங் என 4 நாடுகளில் மட்டும் கவனம் செலுத்த சிட்டி வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்தியா, சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா, போலந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய 13 நாடுகளில் நுகர்வோர் வங்கி சேவைகளை நிறுத்தசிட்டி வங்கி தீர்மானித்துள்ளது. இருப்பினும் இந்த வெளியேறும் நடவடிக்கை எப்போது நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. இந்த நாடுகளில் தங்களது நுகர்வோர் வங்கிச் சேவையை வாங்குவதற்கான நிறுவனத்தை அடையாளம் காணும் பணியை தொடங்க உள்ளதாக சிட்டி வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
இதுபற்றி கூறும் சிட்டி வங்கி உயரதிகாரிகள், “வங்கி சேவைகளை நாங்கள் நிறுத்தவில்லை, வெளியேற மட்டும் தான் செய்வோம். நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லை “ என்று தெரிவித்துள்ளனர். அதேபோல், நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, எங்களது செயல்பாடுகளில் உடனடியாக எந்தவித மாற்றத்தையும், சக பணியாளார்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும்போல் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என்று சிட்டி வங்கி இந்தியாவின் தலைமை நிர்வாகி அஷு குல்லார் கூறியுள்ளார்.
இருப்பினும் எந்தவரையறைகளின் அடிப்படையில் சிட்டி வங்கி வெளியேறவுள்ளது என்பது குறித்து தெரியவில்லை. நுகர்வோர் வங்கி சேவையிலிருந்து அந்த வங்கி வெளியேறுவதற்கு முன் ஒழுங்காற்று அமைப்புகளின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry