துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கலாமா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால்!

0
47

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். பல்வேறு சமயங்களில் விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்தரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்கிற நம்பிக்கையுள்ளதா எனக் கேட்டதற்கு, தனது அரசு முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தியதாகவும், நீர் மேலாண்மைத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக அரசு மீது திமுக கூறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இந்தத் தேர்தலில் மையப்பொருளாக இருக்குமா என வினவியதற்கு, திமுகவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தேர்தல் பிரசார மேடைகளில் அதிமுக மீது ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாமா? என்று சவால் விடுத்தார். மு..ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக கால்பதிக்க அதிமுக உதவுவதாக கூறுவதையும் அவர் மறுத்தார்.

பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சி உள்ள நிலையில் அதற்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு, எதிர்ப்பு இல்லை என்றும், சுகாதாரம், குடிநீர், நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் என மக்களின் எதிர்பார்ப்புகளைத் தமது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், உயர்கல்வியில் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவாக உள்ளதையே நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். அதிமுக அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளதாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது, இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் திறந்தது, சாலைத் திட்டங்கள் நிறைவேற்றியது, தொழிற்சாலைகள் கல்லூரிகள் திறந்தது, காவிரிச் சிக்கலுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு கண்டது ஆகியவை தமது அரசின் சாதனைகள் என அவர்  குறிப்பிட்டார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது தமது அரசின் சாதனை எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்நிலையில், இதே கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் ஸ்டாலினிடம் ,முதலமைச்சர் விவாதத்திற்கு அழைத்தது குறித்த கேள்வி முன் வைக்கப்படும் என இந்தியா டுடே தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry