மகா சிவராத்திரி நாளை வழிபாடு! என்ன சொல்கிறது சைவம்? மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன?

0
197

மகா சிவராத்திரி வழிபாடு நாளை( 11-ந்தேதி) இரவு முதல், 12-ந் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. கோயில்களில் வழக்கம்போல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.

உலகம் அனைத்தும் சிவமயம் என்பது சேக்கிழார் வாக்கு. ‘நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம்என்கிறார் அவர். உலகமே சிவனது அடையாளம் என்று திருமூலர் கூறுகிறார். சிவம் என்பது அன்பு, சைவம் என்பது எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்காது, நலம்பேணும் அறநெறி. எனவேதான் எங்கும் சிவம், எதிலும் சிவம் என்பது சைவத்தின் நோக்கமாக இருக்கிறது. அடியார்க்கு அடிமையாவதையே சைவம் பெருங்குணமாகவும் சொல்கிறது. வேற்றுமை பாராட்டாது, பிறர் நலம் பேணி வாழ்வதை உணர்த்தும் சைவத்தின் பெருமையை, எழுத்தில் அடக்கிவிடமுடியாது.

ஈசனுக்கு உரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதமர் இருப்பவர், பூஜை செய்வபருக்கு நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.  பிரம்மாவும், மகா விஷ்ணுவும், சிவபெருமானின் முடிஅடி தேடிய வரலாறு நிகழ்ந்த நாளான மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியே மகா சிவராத்திரி எனப்படுகிறது.

அதேநேரம், பிரளய காலம் முடிந்த இரவில், சிவபெருமானை ஆகம முறைப்படி நான்கு ஜாம பூஜை செய்தாள் உமாதேவி. விடிந்ததும் சிவனாரை வணங்கிய அம்பிகை, தான் பூஜித்த இரவை, சிவராத்திரி என அழைக்கப்பட வேண்டும் என கோரினாள். அத்துடன், இந்த நாளில் சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை தங்களை பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலமும் பெற்று நிறைவில் முக்திப்பேறு கொடுக்க வேண்டும் என்று வேண்டினாள். அதை சிவ பெருமான் ஏற்றார். அம்பிகை பூஜித்த அந்த நாளே மகா சிவராத்திரி என்றழைக்கப்படுகிறது.

Also Read : எதற்காக கோயில்களுக்குப் போக வேண்டும்? அகத்திலிருந்தே மனதை ஒருநிலைப்படுத்தினால் போதாதா?

இதன்படி கோயில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்கலாம். ஸ்ரீருத்ர பாராயணம், திருமுறை ஓதுதலில் பங்கேற்கலாம். அதேபோல், அகத்திலேயே பரமேஸ்வரனுக்கும் (சிவலிங்கத்துக்கும்), நந்தியெம்பெருமானுக்கும் அபிஷேகம் செய்து வழிபடலாம். மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை நான்கு காலமாக பூஜைகள் செய்யப்பட வேண்டும். மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன், உச்சிகால அனுஷ்டானத்தையும் முடித்துவிட்டு, குருவிடம் ஆசி பெற்ற பிறகு சில ஏழைகளுக்கு உணவளித்து நாம் உண்ண வேண்டும். இதனை சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்திட வேண்டும்.

பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது இந்த மகா சிவராத்திரி நாளில்தான். பதினாறு வயதுடைய மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது இந்த நாளில்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி நாளில்தான் அப்பன் ஈசனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படுகிறது. பிரம்மன் செய்யும் பூஜை முதல் கால பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மகாவிஷ்ணு செய்யும் பூஜை இரண்டாம் ஜாம பூஜை இரவு 9 முதல் நள்ளிரவு 12 மணி வரைக்கும் நடைபெறும்.

அம்பாள் செய்யும் பூஜை மூன்றாவது கால பூஜை நள்ளிரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை நடைபெறும். மூன்றாம் ஜாம பூஜை காலத்தினை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.

நான்காவது கால பூஜை மறுநாள் அதிகாலை 3 மணி காலை 6 மணிவரைக்கும் நடைபெறும். நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம்.

மகா சிவராத்திரி நாளில் பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று அபிஷேகம் செய்கின்றனர். அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது இந்த நாளில்தான். கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது இந்த நாளில்தான்.

மகாசிவராத்திரியன்று இரவு முழுவதும் கண்விழித்து பெருமானை தரிசிக்க முடியாதவர்கள், லிங்கேற்பவ காலமான இரவு 12 மணி முதல் 3 மணி வரையிலான காலத்தில் சிவ தரிசனம் செய்தல் சிறப்பு. இதுவும் இயலாதவர்கள், இருக்கும் இடத்தில் இருந்தபடி, விண்ணையும், மண்ணையும் சிவசக்தியாய் பாவித்து வணங்கலாம்.

பிறப்பு இறப்பு மூலம், உயிரானது உடலைவிட்டு உடல் மாறுகிறது. எனவே நிகழ்காலத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, ஆன்மவிசாரத்தில் ஆழ்ந்து இறைவனிடம் முழு சரணாகதி அடையும்போதே பிறவிப்பிணி அகலும். எதிர்காலத்தில் வினைகள் சேரா என்று திருமூலர் கூறுகிறார். இதன்படி ஈசனை மனமொத்து வணங்கி அவன் அருள் பெறுவோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry