சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிராபகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனைக்கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தலையே போனாலும் தன்மானத்தை இழக்கமாட்டோம். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். என் அப்பாவை சிம்மாசனத்தில் அமரவைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். தேமுதிகவிற்கான நேரம் வந்துவிட்டது.
விருத்தாசலம்,பண்ருட்டி ஆகிய சட்டமன்ற தொகுதியில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் போட்டியிட வேண்டும். சாணக்கியனாக இருந்தது போதும் இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இலவசம் என்று கூறி மக்களை சோம்பேறி ஆக்கி விட்டனர். தமிழக அரசியலில் அதிமுகவுக்கு இனி இறங்குமுகம் தான். எடப்பாடி தொகுதியில் முதல்வார் பழனிசாமி தோல்வியடைவார். விஜயகாந்த், பிரேமலதாவை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள். இனி அவர்கள் 2 பேரையும் சேர்த்து என் உருவத்தில் பார்ப்பீர்கள்” என்று ஆவேசமாக பேசினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய பிரபாகரனிடம் மக்கள் நீதி மய்யம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி வைக்க தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. அவர்கள் எங்களை விட சிறிய கட்சி. தேமுதிக மக்கள் மற்றும் தெய்வத்துடன் தான் கூட்டணி என்றார். விருத்தாசலத்தில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டபோது, “கட்சி எங்கு நிற்கச் சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன்” என்று விஜய பிரபாகரன் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry