எதற்காக கோயில்களுக்குப் போக வேண்டும்? அகத்திலிருந்தே மனதை ஒருநிலைப்படுத்தினால் போதாதா?

0
61

மனதை ஒரு நிலைப்படுத்தினால் இறை நிலையடையலாம் எனும் பொழுது, கோவிலுக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வி அனைவருக்குமே பரலாக எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கோவிலுக்குப் போகாமலேயே இறைவுணர்வு பெற முடியும். ஆனால், அனைவருக்கும் அது சாத்தியமில்லை. இயல்பாகவே மன ஒருமைப்பாடு அமைந்தவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டே தியானம் செய்து இறைவுணர்வில் திளைத்திருக்க முடியும்.

மாணிக்கவாசகப் பெருமான் வயது ஆக ஆக கோவிலுக்குப் போவதைக் குறைத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தன் வசிப்பிடத்தில் நின்று கொண்டு, கோபுரத்தை மட்டும் வணங்கினார். ஆனாலும், அவர் உள்ளம் மட்டும் எப்பொழுதும் இறைவுணர்விலேயே குவிந்து நின்றது. எனவே இறைவனே அவரைத் தேடி வந்து, அவர் பாடல்களை பிரிதி எடுத்துக் கொண்டு போய் சிதம்பரம் கோவிலில் வைத்ததாகச் சொல்வார்கள்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் சேதி என்னவென்றால், உண்மையான பக்தியும் மன ஒருமைப்பாடும் இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே இறைவன் வருவார் என்பதுதான். இது தவசிகள், யோகிகள், மகான்கள் நிலையாகும். சராரசரி மனிதனுக்கு மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்றால், ஸ்தூல வடிவம் ஏதாவது தேவைப்படுகிறது. அந்த வகையில் ஆலயங்களில் உள்ள விக்ரகங்களிலோ, லிங்க வடிவத்திலோ பார்வையைக் குவித்து, மனதை ஒரு நிலைப்படுத்தும் பொழுது, ஒரு பரவசப் பேருணர்வு ஏற்படுகிறது. இதையே பக்திப் பரவசம் என்பார்கள்.

அந்த பேருணர்வு நிலைக்கும் பொழுது, அதுவே யோகமாகப் பரிணமிக்கின்றது. ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, இறைவனுடைய இருப்பிடத்திற்குச் செல்கிறோம் என்கிற மன நிறைவு கிடைக்கிறது. மன நிறைவும், பேருணர்வும் கூடும் பொழுது பேரானந்த நிலை ஏற்படுகிறது. அந்நிலை தொடரத் தொடரத்தான் பக்தன் ஞான நிலையை எய்துகிறான்.

வாரியார் சுவாமியிடம் இந்தக் கேள்வியை ஒருவர் கேட்ட பொழுது, அவர் ஒரு பதிலைச் சொன்னார். பசு தன் இரத்தத்தைப் பாலாக்கி நமக்குத் தருகிறது. அதன் உடல் முழுவதும் இரத்தம் இருக்கிறது என்றாலும், பாலானது காம்பிலிருந்துதான் வருகிறது. அது போல எல்லாவிடத்திலும் கடவுள் நீக்கமற நிறைந்து நின்றாலும், அவரது அருளானது ஆலயங்களில்தான் சுரக்கிறது என்றார்.

வேறொரு கோணத்திலும் பார்க்கலாம். நாம் வசிக்கும் பூமிக்கு அடியில் அனேகமாக எல்லா இடங்களிலும் நீர் இருக்கிறது. ஆனால், நமக்கு எட்டும் வகையில் எல்லா இடத்திலும் நீர் இருப்பதில்லை. சில இடங்களில்தான் நீர் ஊற்று இருக்கிறது. இந்த நீர் ஊற்றை கண்டறியும் வல்லமை பெற்றவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் இடத்தைத் தோண்டும் பொழுது நீர் கிடைத்து விடுகிறது. அது போலவே கடவுள் எங்கும் வியாபித்து நின்றாலும், சில இடங்களில்தான் அவர் அருளானது ஊற்று போலப் பெருக்கெடுத்துப் பாய்கிறது. அது போன்ற இடங்களைத் தங்கள் ஞானத்தால் உணர்ந்த மகான்கள், அந்த இடங்களில் தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள். எனவேதான் அத்தகைய இடங்களில் அதிக சக்தி வாய்ந்தவைகளாக மக்களால் இன்றும் உணரப்படுகின்றன.

மேலும் ஆலயங்கள் என்பது வெறும் கட்டிடங்கள் அல்ல. ஆகம விதிப்படி, வாஸ்து முறைப்படிக் கட்டப்பட்டவைகளாகும். பிரபஞ்ச ஆற்றல்களை ஈர்த்து தன்னகத்தே வைத்துள்ள சக்திக் களங்களாகும். நீங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தளங்களையும் பாருங்கள் அவற்றின் கோபுரங்கள் முக்கோண பிரமிடு வடிவத்தை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். முக்கோண வடிவமானது பிரபஞ்ச ஆற்றலை தன்னகத்தே ஈர்த்து தேக்கி வைக்கும் ஆற்றல் படைத்தது ஆகும்.

பல முக்கோண வடிவங்களை வரைந்து, அதற்கு முன் அமர்ந்து குறிப்பிட்ட மந்திரங்களைச் ஜெபிக்கும் பொழுது, அந்த இடத்தின் இயக்கமே மாற்றியமைக்கப்படுகிறது. இவற்றைதான் நாம் சக்கரங்கள், யந்திரங்கள் என்று சொல்கிறோம். சித்தர்களே கூட யந்திர வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். நம் வீட்டின் முன்னால் போடும் கோலங்கள் கூட இத்தகைய ஆற்றல் படைத்தவையே. ஏதேதோ கண்ட கண்ட புத்தகங்களை எல்லாம் பார்த்து கோலம் போட்டு வைத்தால் வீட்டில் உள்ளவர்கள் மன இயக்கத்தில் பலவிதமான முரண்படுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் தோன்றும்.

எனவே ஆலயங்களின் கோபுரங்களுக்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்வது இதனால்தான். அப்படிப்பட ஆலயங்களுக்குச் சென்று உண்மையான ஈடுபாட்டோடு வணங்குபவர்களுக்கு மனம் எளிதில் வசப்படும். அதன் சிறப்பை உணர்ந்தவர்கள் ஆலயங்களை மட்டுமல்ல தன் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதி பெற்று விடுகிறார்கள்.

அதோடு கூட அங்கு அமையும் சூழல்கள் அதாவது மணியோசை, மேளதாள முழக்கங்கள், தூபதீபங்களின் மணம், மந்திரங்களின் ஒலி இவையெல்லாம் கூடி மனதில் பக்திப் பரவசத்தைத் தூண்டி விடுகின்றன. எனவே வெளியில் கிடைக்காத பக்திப் பேருணர்வை ஆலயங்களில் மக்கள் எளிதில் பெறுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அங்குள்ள அனைத்து விஷயங்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வழிபாடு செய்த மகான்களின் தூய எண்ணங்களைப் பிரிதிபலிக்கின்றன.

இதனால் மனஒருமைப்பாட்டோடு அங்கே சென்று வழிபடுகின்ற பக்தர்களது மனமும் தூய்மையை அடைகின்றது. உலகம் முழுவதும் பரவியுள்ள சூரிய ஒளியை, ஒரு ஆடியின் மூலம் குவிக்கும் பொழுது, அதன் ஆற்றல் பன்மடங்கு பெருகி விடுகிறது. அது போல பிரபஞ்ச ஆற்றல் குவிக்கப்பட்டுள்ள இடங்களே ஆலயங்கள் என்பதை ஐயமின்றி உணருங்கள்.

இல்லமும் கோவில்தான். இல்லம் ஜீவாத்மாக்களின் வசிப்பிடம். உள்ளம் பரமாத்மாவின் வசிப்பிடம். அந்த உள்ளத்தின் புறத் தோற்றமாகவே கோவில்கள்(கருவறை) அமைக்கப்பட்டுள்ளன. அந்த கோவில்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வடிவமைப்புகள்தான் ஆலயம். ஆலயங்கள் நம் உடல் அமைப்பை ஒத்து அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அதற்குள்தான் ஜீவாத்மா பரமாத்மாவில் லயமாகிறது. ஆன்மா லயமாகும் இடம்தான் ஆலயம்.

இராம் மனோகர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry