கோயில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டம்! பாஜக எதிர்ப்பை மீறி  தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

0
17

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாக கிடைக்கப்பெறக்கூடிய நகைகளை, சாமி நகைகளை தவிர்த்து மீதமுள்ள நகைகளை உருக்கி 24 கேரட் தங்கமாக வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு..ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த காலங்களில் பழனிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரைஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம்அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உட்பட 9 திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்கள், மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 497 கிலோ 795 கிராம் தங்கம், முதலீடு செய்யப்பட்டு வட்டி திருக்கோயில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டமானது மேலும் 3 கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. திருவேற்காடு, இருக்கன்குடி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களில் இந்த திட்டமானது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை அந்தந்த திருக்கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். மேலும், அந்தந்த திருக்கோயில்களில் இறைவன், இறைவி திருவுருவங்களுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறபட்டு பயன்படுத்தப்படும்.

இதனிடையே, நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோயிலில் உள்ள தங்க நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் முதலீடு செய்து, அதில் வரும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கோயில்களின் சொத்தின் மூலம் அல்லது அதன் வருமானத்தை கொண்டே அந்த கோயில்களுக்கு செலவிடப்படுகிறது என்பதே உண்மை. ஆகவே, சட்டத்திற்கு புறம்பான, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறமற்ற செயலை இந்து அறநிலையத்துறையின் மூலம் செய்ய முனையும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நகைகளை உருக்கும் திட்டத்தை எதிர்த்து சரவணன் என்பவர் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது, சுமார் 38 ஆயிரம் கோயில்களில் உள்ள 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது, நகைகளை வகைப்படுத்தி தணிக்கை செய்யாமல் அவற்றை உருக்க அனுமதிக்கக் கூடாது வாதிடப்பட்டது.

கோயில் நகைகளை தணிக்கை செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2 பேரும் நியமிக்கப்பட்டு, இதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry