வீணடிக்கப்பட்ட ‘உடன்பிறப்பே’ தலைப்பு! உறவுத் திருமணங்கள் தான் சரியான முறையா? உணர்ச்சிகளற்று எட்டு போடும் திரைக்கதை!

0
157

ஜோதிகாவின் 50வது படம் என்ற விளம்பரத்தோடு திரை வெளிச்சம் அடைகிறது, டைட்டில் கார்டும் இன்னும் நம்பிக்கை தருகிறது. ஆனால், கதையும், திரைக்கதையும் இறுதி வரை தண்டவாளம் போல சேராமலேயே முடிவடையும் வகையில் இரா. சரவணன் படத்தை இயக்கியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் அடிதடி என மீசையை முறுக்கிக் கொண்டு வலம்வரும் சசிகுமார், சட்டத்தை மட்டுமே நம்பும் சமுத்திரகனி இருவரும் மச்சான் மச்சினன்கள். இவர்களுக்கு இடையே தங்கையாகவும் மனைவியாகவும் ஜோதிகா கண்ணீரும் கம்பலையுமாக வந்து போகிறார். இந்தப் படத்தின் கதையை எப்படிச் சொன்னால் உங்களுக்கு புரியும் என்று எனக்குத் தெரியவில்லையோ; அப்படித்தான் இயக்குநரும் கதையை சரியாக தொடங்க முடியாமல் திணறியிருக்கார்.

ஒரு சிறுவன் கிணற்றுக்குள் விழ, அவனை காப்பாற்ற மற்றொரு சிறுவன் குதிக்க முதல் காட்சி தொடங்குகிறது. பின்னர் அப்படியே பாத்திரங்களின் அறிமுகம், கோயில் திருவிழா, அங்கே சசிகுமாரின் அதிரடி, அதைப் பார்த்து சமுத்திரகனியின் கோபம், இரண்டையும் நினைத்து ஜோதிகாவின் ஏக்கம் இது இரண்டாவது காட்சி. அண்ணன் தங்கை இருவரது உறவின் ஆழத்தைப் பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள், ஏன் அவர்களே கூட சுற்றி இருப்பவர்களிடம் ஒப்புவிக்கிறார்கள். ஆனால், பாசமுள்ள அண்ணன் தங்கையாக வரும் சசிகுமாரும் ஜோதிகாவும் எந்த காட்சியிலும் பேசிக்கொள்வதே இல்லை.

சசிகுமாரின் எதிரி இடும் சாபத்தால, தன் மகன் இறந்துவிட்டதாக நினைக்கும் சமுத்திரகனி, சசிகுமாரை விட்டு விலகுகிறார். உண்மையோ கிணற்றுக்குள் விழுந்த தன் மகனையும் அண்ணன் மகனையும் காப்பாற்ற முடியாமல் போகும் ஜோதிகா, தன் மகனை தியாகம் செய்துவிட்டு மருமகனை மட்டும் உயிருடன் மீட்கிறார். இதனால் பிரிந்து போன குடும்பம் பல வருடங்களுக்குப் பின்னர் சேர்ந்ததா என்பது தான் கதை. (சேரும்சேராம எங்கப் போகும், ஏன்னா இது தமிழ் சினிமாவாச்சே!)

நல்ல கதைக்களத்தையும் நடிகர்களையும் தேர்வு செய்த இயக்குநர், அதனை திரைக்கதையில் எப்படி கொண்டுவர வேண்டும் என மறந்துவிட்டார். சமுத்திரக்கனி நேர்மையான பாத்திரம் என்பதால், அதனை நியாயப்படுத்த கலையரசன் கேரக்டரை தேவையில்லாமல் கொண்டுவந்துஉடன்பிறப்பேதலைப்பை வீணடித்துவிட்டதாக தோன்றுகிறது.

சசிகுமார் கேரக்டரை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம், முறுக்கி விடும் அளவிற்கு மீசையை வளர்க்கவிட்ட அவருக்கு, நடிக்கும் வாய்ப்பை கொஞ்சம் அதிகப்படுத்திருக்கலாம். ஜோதிகா பெரும்பாலான காட்சிகளில் தூணோடு தூணாக நின்று கண்ணீர் வடித்துக்கொண்டே இருக்கிறார். ரசிகர்கள் தயவுசெய்து ஜோதிகா கிணற்றில் குதித்து தண்ணீரில் தத்தளிக்கும் காட்சியை பார்க்க வேண்டாம். என்னங்கடா பண்ணிவச்சிருக்கீங்க மொமண்ட் அது.

சமுத்திரகனிக்கு எப்போதும் போல ஸ்டிரிக்ட் ஆபிசர் கேரக்டர் தான். உறவைப் பற்றி பேசும் படத்திலும் அவரை நேர்மையான வாத்தியாராக காட்ட வேண்டிய அவசியம் என்னவோ? ஹெல்மெட் போட்டுதான் பைக் ஓட்டணும், ஆறுநூறு அடிக்கு மேல போர் தோண்டக் கூடாது அப்படி இப்படின்னு அட்வைஸ் பண்ணிட்டே இருப்பது சலிப்புத் தட்டுகிறது. சூரி மட்டும் சில காட்சிகளில் அவருக்கே உரிய பாணியில் கொஞ்சம்களுக்என்று சிரிக்க வைக்கிறார்

அண்ணன் தங்கை உறவைப் பற்றிய படம் என்றாலே, கதையை நகர்த்த உறவுக்குள் திருமணம் என்று, வழக்கமான தமிழ் சினிமாவாக ஆர்டிஓ ஆபிஸ் எட்டுப் போடுகிறது உடன்பிறப்பே. “உறவு திருமணம் முன்பைப் போல இல்லை, அது பசங்க விருப்பம்என பாடமெடுக்கும் ஜோதிகாவே, இறுதியில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும் போது அதில் சந்தோஷப்படுகிறார்: அட கொடுமையே.! அண்ணன், தங்கை உறவுகளை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல, உறவு திருமணங்கள் தான் சரியான முறையா? இதைத் தாண்டி இந்த உறவின் புனிதங்களையும் ஆழத்தையும் விவரிக்க வேறு வழிகளே இல்லையா? இறுதியாக சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார்கள் உடன்பிறப்பே குழுவினர்.     

உறவுகளை மையப்படுத்தி படங்கள் எடுக்கும் போது குறிப்பிட்ட கேரக்டர்கள் ரசிகர்களை உலுக்கி எடுக்க வேண்டும். உதாரணமாக பாரதிராஜாவின்கிழக்குச் சீமையிலேபடத்தின் பாத்திரங்களாகட்டும், கதை, திரைக்கதை, படமாக்கிய விதம், வசனங்கள் என அனைத்துமே ரத்தமும் சதையுமாக பார்ப்பவர்களின் மனதை படுத்தி எடுத்துவிடும். இவைகளில் எதுவுமே உடன்பிறப்பே படத்தில் முழுமையாகவில்லை.

டி. இமானின் இசையில்அண்ணே யாரண்ணேபாடல் மட்டும் மனதில் தங்குகிறது. பின்னணி இசையில் இடைவேளைக்குப் பின்புவரும் கோயில் காட்சியில் ஒலிக்கும் மங்கள இசை மனதை இதமாக்குகிறது. சசிகுமார்ஜோதிகாசமுத்திரகனி இவர்கள் மூவரை சுற்றி மட்டுமே திரைக்கதையை கட்டமைத்திருந்தால், குறிப்பாக சமுத்திரகனி நெற்றியில் இருக்கும் நேர்மை என்ற ஸ்டிக்கரை பிரித்து எடுத்திருந்தால், உடன்பிறப்பே படத்துக்கு சபாஷ் போட்டிருக்கலாம். அமேசான் ஓடிடி தளத்துக்கு உணர்ச்சிகளற்ற இந்தஉடன்பிறப்பேஓகே தான். சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது.

விமர்சனம்களந்தை அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர்

தொடர்புக்கு :- kalandhai.abdulrahman@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry