தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி, இந்த ஆண்டு முதலே பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதற்கு பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ஒவ்வொரு வட்டாரத்தின் தன்மையும் கல்வியில் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் பரவலாக தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. பாடத்திட்ட உருவாக்கம் முதல் பட்டமளிப்பு வரை எல்லாமும் அதற்கென்று உருவாக்கப்பட்ட குழுக்கள்தான் தீர்மானிக்கும். இதுதான் சட்டம் தந்திருக்கிற தன்னாட்சி அதிகாரம். தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, நிதி வழங்குவது, கண்காணிப்பதோடு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிறைவடைந்தது.
பொதுப் பாடத்திட்டம் தமிழகத்தின் யதார்த்தங்களையும், நமது மாணவர்களின் தேவைகள், போதாமைகளையும் கருத்தில்கொண்டிருக்கும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் உயர் கல்விக்குச் செல்வது தமிழ்நாட்டில்தான். இந்திய/உலக அளவில் நமது உயர் கல்வியின் நிலை என்ன, நமது கல்வி நிறுவனங்களில் எத்தகைய கற்றல்-கற்பித்தல் நடைபெறுகிறது, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை நமது நிறுவனங்கள் அளிக்கின்றனவா? என்றெல்லாம் ஆராய வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில் ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான ஒரு பொதுப் பாடத்திட்டத்தை முன்வைப்பது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
பாடத்திட்டங்கள் பன்மைத்துவமாக அமைவதன் சாதகங்களை ஆலோசித்துத்தான் பல்கலைக்கழக மானியக் குழு, 40 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி நிறுவனங்களுக்கு ‘தன்னாட்சி’ அந்தஸ்து வழங்கத் தொடங்கியது. தற்போது, இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் 800க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான்.
2022 தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி நிறுவனங்கள். இப்படியான நிலையில், தடாலடியாக ஒரு பொதுப் பாடத்திட்ட வரைவை அமல்படுத்துவது பல கேள்விகளை எழுப்புகிறது.
இரண்டு காரணங்களுக்காக பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்குவதாகச் சொல்கிறது மாநில உயர் கல்வி மன்றம். ஒன்று சமநிலைப் பிரச்சனை, இரண்டாவது வெர்ட்டிகல் மொபிலிட்டி. அதாவது ஒரு மாணவன் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான், சூழல் காரணமாக அவன் வேறு கல்லூரியில் சேர நேரிடும். இதைத்தான் வெர்ட்டிகல் மொபிலிட்டி என்கிறார்கள். இதற்கு அடிப்படை கட்டுமானங்களை ஒரே மாதிரியாக வைத்தாலே போதும், எதற்காக பொதுப்பாடத்திட்டம் என கேட்கின்றனர் பேராசிரியர்கள்.
தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் – நடைமுறைகளைக் கணக்கில் கொண்டு ஒரு முன்னுதாரணமான பாட வரைவை அரசு வழங்கியிருக்க முடியும். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்த வரைவின் கீழ், தமிழ் இலக்கியப் பாடங்கள் 25 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பேராசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். சமகால இலக்கியங்களுக்கான இடமே அதில் இல்லை.
நூறு ஆண்டு கால தற்காலக் கவிதை, புனைக்கதை, கட்டுரை, நாடகம் ஆகிய அனைத்தும் ஒரே பாடமாகச் சுருக்கப்பட்டுள்ளன. தமிழிலக்கிய நதி பாரதியோடு நின்றுவிட்டது போன்ற மனோபாவத்தையே இந்தப் புதிய பாடத்திட்ட வரைவும் பிரதிபலிக்கிறது என்கின்றனர் பேராசிரியர்கள். கடந்த நூறு ஆண்டுகளுக்கான உலகளாவிய நவீன, பின்-நவீன இலக்கியக் கோட்பாடுகள், வகைமைகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமே தமிழ் இலக்கியக் கல்வியைச் சமகாலத்தன்மை உடையதாக மாற்ற முடியும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
Also Read : நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சிரமம்! தம் அடிக்கறவங்க உடனடியா CT SCAN செய்து பாருங்க!
உயர் கல்வியில் தமிழக மாணவர்களின் பின்னடைவுக்கான காரணங்களை இந்தப் புதிய பாடத்திட்டம் எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள எத்தகைய முறைமைகளை ஆசிரியர்கள் பின்பற்றுகிறார்கள், கல்லூரி வளாகங்களில் எத்தகைய கற்றலுக்கான சூழல் நிலவுகிறது என்பதும் அலட்சியப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
‘எப்படியாவது’ தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதே ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்லூரி நிர்வாகங்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஆனால், உயர் கல்வி பெற்ற மாணவர் ஒருவர் உயர்ந்த குடிமைப் பண்புகளோடும் சமூகத்தின் சவால்களைச் சுயமாக எதிர்கொள்கிறவராகவும் இருக்க வேண்டும். இதுபற்றி உயர்கல்வித்துறை கண்டுக்கொள்ளவே இல்லை. மாணவர்கள் பாடங்களைத் தவிர்த்து சமூகம், கலை, அரசியல் விஷயங்கள் சார்ந்து உரையாட, விவாதிப்பதற்கான சூழலை சிதைத்து, இளைய தலைமுறையை உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது உயர் கல்வித்துறை.
நிலைமை இவ்வாறு இருக்க, “பொதுப்பாடத்திட்டம் காலாவதியான ஒன்றாகவே இருக்கிறது, சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் அதில் இல்லை, குறிப்பாக செய்முறைப் பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் புதிய பாடங்களை எப்படி நடத்துவது எனத் தெரியவில்லை. இந்தப் பாடத்திட்ட வடிவமைப்பு அப்படியே புதிய கல்விக்கொள்கையை ஒத்திருக்கிறது. மாணவர்களை அறிவுசார்ந்தவர்களாக உருவாக்காமல், திறன் சார்ந்தவர்களாக மாற்றி, தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப்பாடத் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது” என்கிறார் அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வே. ரவி.
Also Read : நிலம் தமிழர்களுடையது! வேலையோ வட இந்தியர்களுக்கு! NLC முறைகேடு பற்றி விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்!
தமிழ்நாடு உயர் கல்வி மன்றமானது பல்கலைக்கழகங்களில் விடைத்தாள் திருத்தம் போன்ற பொதுவான பணிகளை மட்டுமே ஒருங்கிணைக்கும் அதிகாரம் பெற்றது. பாடத்திட்டத்தை உருவாக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கும் இல்லை என்ற கருத்தும் அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவந்தாலும், தாய்மொழியில்கூட எழுதப் படிக்கத் தெரியாத பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர் கல்விக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் முதல் தலைமுறைப் படிப்பாளிகள். இவர்களை சீராக்க உயர்கல்வித்துறையிடம் எந்தத் திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிகளைப் போல உயர்கல்விக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது பொருந்தவே பொருந்தாது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry