நிலம் தமிழர்களுடையது! வேலையோ வட இந்தியர்களுக்கு! NLC முறைகேடு பற்றி விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்!

0
26
டாக்டர் அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் வேலை பெற்ற 28 பேர் வட இந்தியர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.

Also Read : நீங்களும், உங்கள் கடன்களும்..! அதென்ன சுப கடன், அசுபக் கடன்! கடன் வாங்கக் கூடாத நாட்கள் எவை? How to get rid of loans by astrology!

வட இந்தியர்களுக்கான வேலை நேரடியாக வழங்கப்படவில்லை, கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வட இந்தியர்களுக்கு சொந்தமான நிலங்களே இல்லை எனும் போது, வட இந்தியர்கள் எவ்வாறு நிலம் வழங்கியிருக்க முடியும்? அவர்கள் நிலமே வழங்காத நிலையில் அவர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டது?

வட இந்தியர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மையை தெரிந்து கொள்வதற்காக, கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்தெந்த நாட்களில் பரிந்துரை பட்டியல் வழங்கப்பட்டது? அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல் ஆகியவற்றை வழங்கும்படி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு என்எல்சி நிர்வாகம் பதிலளிக்கவில்லை. அது குறித்த தகவல்கள் குப்புசாமி கோரிய வடிவத்தில் தங்களிடம் இல்லை என்று என்எல்சி நிர்வாகம் கூறியுள்ளது. இல்லாத தகவல்களின் அடிப்படையில் என்எல்சி எவ்வாறு நிரந்தர வேலை வழங்கியது?

Also Read : என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

என்எல்சி நிறுவனத்துக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த 12.12.2022-ஆம் நாள் நான் எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விடையளித்திருந்தார். அப்போது மத்திய அரசிடம் இல்லாத செய்திகளை என்எல்சி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது எப்படி? இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்துக்கு என்எல்சி மறைத்ததா? என்பது குறித்து விடையளிக்கப்பட வேண்டும்.

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்எல்சி வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry