‘ஜகா’ திரைப்படம் சிவபெருமானை அவதித்துவிட்டதாக இந்து அமைப்புகள் புகார் கூறி வரும் நிலையில், மலிவான விளம்பரம் தேட எதையும் செய்யவில்லை என்று இயக்குநர் விஜயமுருகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஓம் டாக்கீஸ் சார்பில், ஜகா திரைப்படத்தை ரா. விஜயமுருகன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரில், ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிவபெருமான் சுவாசிப்பது போல உள்ளது. இந்தப் போஸ்டர் ஹிந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் உள்ளதாக ஹிந்து தமிழர் கட்சி தலைவர் இராம ரவிகுமார் மற்றும் சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜயமுருகனிடம் வேல்ஸ் மீடியா சார்பில் பேசியபோது, “எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டுத்தான் படப்பிடிப்பையே தொடங்கினோம். அப்படியிருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா? கோவிட்-19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சிதான் அது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்றுததுதான் அந்தப் போஸ்டர். சக மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட, கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அவமதிக்கப்படவில்லை, அது போன்ற எண்ணம் ஒருக்காலும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் தேடும் விருப்பம் எங்கள் குழுவினருக்கு துளியும் இல்லை.
இந்தப் படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘மைம்’ கோபி இருவரும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜே.எஸ்.கே.கோபி, ஹரி, யோகி, வலினா பிரின்ஸ், M.S.குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கரு என்பது, “கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ‘மைம்’ கோபி மனநல காப்பகம் நடத்தி வருகிறார். அந்த இடத்தை அபகரிக்க ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.
காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம். மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுளர்களை அவமதிக்கும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை” என்று விஜயமுருகன் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry