பாடியை வாங்கலைன்னா கேஸ்! கலெக்டர் மிரட்டுவதாக கதறும் சமூக ஆர்வலர் குடும்பம்! குவாரி உரிமையாளர்களுக்கு ஆட்சியர் ஆதரவா?

0
153

உரிமம் இன்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராகப் போராடிய கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதனை குவாரி அதிபர் வாகனம் ஏற்றி கொன்றது, தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், மறு பிரேதப் பரிசோதனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; ரூ.1 கோடி நிவாரணம் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி, ஜெகநாதன் உறவினர்கள் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள உடற்கூறு ஆய்வு மையத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Also Read : தமிழகத்தில் வேகமாகப் பரவும் காய்ச்சல்! எழும்பூர் மருத்துவமனையில் நிரம்பி வழியும் படுக்கைகள்!

இதற்கிடையில், கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சமூகவிரோதிகளால் தங்களது உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், குவாரி தொழில் செய்பவர்கள் பற்றி பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆட்சியரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசும் குவாரி உரிமையாளர்கள்

இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஜெகநாதன் குடும்பத்தினரிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அப்போது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும், உயிரிழந்த ஜெகநாதன் மனைவிக்கு அரசு சார்பில் விதவை உதவித்தொகையும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினர் இதை ஏற்க மறுத்துள்ளனர். ஆனால், உடலை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் மிரட்டியதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குவாரி உரிமையாளர்கள் மனு அளித்த பிறகே மாவட்ட ஆட்சியர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தங்களை அவமானப்படுத்தி மிரட்டியதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதேநேரம், தன் மீதும், தனது மகன்கள் மீதும் வழக்கு போட்டுவிடுவேன் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிரட்டியதாக ஜெகநாதன் மனைவி ரேவதி கண்ணீர்விட்டு கதறியுள்ளார்.

மேலும், “தனது கணவர் திமுகவைச் சேர்ந்தவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை பங்காளி என அழைத்து அவருக்காக தேர்தல் வேலை செய்தவர். தனது கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியோ, திமுகவினரோ கண்டுகொள்ளவே இல்லை. மாவட்ட ஆட்சியரின் மிரட்டலுக்கு பயந்துதான் எனது கணவரின் உடலை பெற்றுக்கொள்கிறேன்” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள காளிபாளையத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி(அன்னை புளூ மெட்டல்ஸ்) செயல்பட்டு வந்தது. உரிமம் முடிந்தும் இயங்கி வருவதாக ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில், கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி குவாரிக்கு சீல் வைத்தனர்.

கொல்லப்பட்ட ஜெகநாதன்
கைது செய்யப்பட்டுள்ள குவாரி உரிமையாளர் செல்வகுமார்

இதனால் ஆத்திரமடைந்த குவாரி உரிமையாளர், திட்டமிட்டு ஜெகநாதனை கொலை செய்தார் என்பதே புகார். இதன் அடிப்படையில் குவாரி உரிமையாளர் மற்றும் வேன் ஏற்றி கொலை செய்த ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆனந்தகுமார், செய்தியாளர் கரூர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry