முதலமைச்சருக்கு தண்ணீர்காட்டும் தலைமைச் செயலாளர்! பா.ஜ.க.வின் மறைமுக நெருக்கடியால் தவிக்கும் ரங்கசாமி!

0
110

புதுச்சேரியில் தலைமைச் செயலாளரின் ஒத்துழைப்பின்மையால், முதலமைச்சர் ரங்கசாமி பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

2016ல் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி துணை நிலை ஆளுநராக பதவியேற்றார். அதுமுதல் ஆட்சி முடியும் வரை நாராயணசாமிகிரண் பேடி இடையே அதிகார மோதல் உச்சத்தில் இருந்து வந்தது. இதனால் அரசு நிர்வாகம் முடங்கியது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியாத காரணத்தால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் ஆண்ட கட்சி அடிபட்ட பாம்பாக சுருண்டு கிடக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்றே என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நினைத்தார். ஆனால், கடந்த ஆட்சியில் நாராயணசாமி எதிர்கொண்ட திண்டாட்டங்கள் கண் முன் வந்துபோக, கூட்டணி வைக்கலாம் என மனநிலைக்கு வந்த அவருக்கு பாஜக கடுமையான நெருக்கடி கொடுத்தது. வேறுவழியின்றி பாஜக கூட்டணிக்கு ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இந்தக் கூட்டணி ஆட்சியை பிடிக்க, பாஜக ஆறு இடங்களில் வெற்றிபெற்றது.

முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற நிலையில், இலாகா ஒதுக்கீட்டில் பாஜக காட்டிய கெடுபிடியால் அமைச்சர்கள் பதவி ஏற்பதில் ஒரு மாதங்களுக்கு மேலாக தாமதம் ஏற்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்..க்களாக பாஜக நியமித்தது. முதலமைச்சர் ரங்கசாமியின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த நியமனம் நடைபெற்றதாக அப்போது சலசலப்பு எழுந்தது. இதுமட்டுமல்லாமல், சபாநாயகர் பொறுப்பையும் பிடிவாதமாக பெற்றுக்கொண்ட பாஜக, ராஜ்யசாமி எம்.பி. பதவியையும் என்.ஆர். காங்கிரஸுக்கு தராமல் தட்டிப்பறித்துக் கொண்டது.

சிக்கல் இல்லாமல் ஆட்சி நிர்வாகம் நடைபெற வேண்டும், மக்களுக்கான நலத்திட்டங்கள் சரியாக சென்றடைய வேண்டும் என்ற காரணத்தால், பாஜக கொடுத்த அத்தனை நெருக்கடிகளையும் ரங்கசாமி ஏற்றுக்கொண்டார். ஆனால் விடாது கருப்பு கதையாக, தலைமைச் செயலாளர் ரூபத்தில் தற்போது முதலமைச்சருக்கு பாஜக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதுதான் தலைமைச் செயலக வட்டாரத்தில் விவாதிக்கப்படும் செய்தியாக இருக்கிறது

இதுபற்றி பேசிய, பெயர் வெளியிட விரும்பாத தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர், “தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது. கடந்த ஆட்சியின்போது உரிமை மீறல் புகாரின் அடிப்படையில், அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி அவரை அழைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் காக்க வைத்தார். பிளாஸ்டிக் சேரில், வெளியில் அவர் உட்கார வைக்கப்பட்டார். இதனால் எரிச்சலடைந்த அஸ்வினி குமார், ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் அவரது மனநிலை மாறவில்லை என்றே தெரிகிறதுஎனக் கூறினார்கள்

திட்ட அனுமதி அல்லது ஒப்புதலுக்காக அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளை தலைமைச் செயலாளர் நிராகரிப்பதாகவும், அதில் குறைகளைக் கூறி திருப்பி அனுப்புவதிலேயே ஆர்வம் காட்டுவதாகவும், முக்கிய அமைச்சர்களுடன் இருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என யாருமே உள்ளாட்சித் தேர்தலை விரும்பாத நிலையில், அதை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என்பதில் தலைமைச் செயலாளர் அவ்ஸனி குமார் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது

எந்தவொரு ஆட்சி அமைந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்..க்களின் அலுவலகங்களுக்குத் தேவையான தளவாடங்களை கொடுப்பது இதுவரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. (ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனர் மெஷின் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்) ஆனால், தற்போது ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரையில் எம்.எல்..க்களுக்கான எந்தவொரு பொருட்களும் வழங்கப்படவில்லை. இதுபற்றி விசாரித்தாலும், தலைமைச் செயலாளரை நோக்கியே கைகாட்டுகின்றனர்.

தலைமைச் செயலாளரின் ஒத்துழையாமை, அரசு ஊழியர்களைத் தாண்டி, பொதுமக்களிடையேயும் சென்று சேர்ந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் துணை நிலை ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கி எதையும் செய்யவிடாமல் தடுத்த பாஜக, தற்போது, ரங்கசாமியுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுவிட்டு, தலைமைச் செயலாளர் மூலமாக ஆட்சியாளர்களுக்கு குடைச்சல் கொடுப்பது சரியா? என்று கேட்கின்றனர். முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு தராமல், மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால், பாஜகவுக்குத்தான் கெட்ட பெயரே தவிர, ரங்கசாமிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எங்களுக்கு உண்மை புரிந்துவிட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry