உயிரைப் பணயம் வைக்கும் விளையாட்டு! போட்டியில் தோற்றால் சுட்டுக்கொலை! அதிகார வர்க்கத்தை அலறவிடும் Squid Game!

0
119

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் என்ற கொரியன் வெப் சீரிஸ் பார்ப்பவர்களை கதிகலங்கச் செய்கிறது. முழுமையான படைப்பாகவும், பணத்தை மையப்படுத்தி அது பேசும் மனிதர்களின் உளவியலும், வர்க்க அரசியலும் சபாஷ் போட வைக்கிறது.

சினிமாக்களை போல வெப் சீரிஸ்களுக்கு வரையறைகளும் இலக்கணமும் கிடையாது. இயக்குநர் பேச நினைப்பதை எப்படி வேண்டுமானாலும் எந்த மாதிரியான திரை மொழியாகவும் கொண்டு வரலாம். ஆனால், Squid Game எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே தான் நிற்கிறது.   

தனி மனிதனின் முக்கியமான அடையாளமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுவதுபணம்’. இந்த கருவை வைத்துக் கொண்டு லட்சம் கதைகள் சொல்லலாம். ஆனால், Squid Game கதைகளாக இல்லாமல், எளிய மனிதர்களின் சுயரூபத்தையும் யதார்த்தத்தையும் பேசுகிறது. குடும்பத்தினரோ, நண்பர்களோ பணம் என்று வந்துவிட்டால் இங்கே எல்லாமே ஒருபக்க நியாயம் தான். Squid Game அப்படித்தான் தன் பக்க நியாயங்கள் மற்றவர்களின் உயிர்களை எடுக்கும் ஆயுதமாகிறது. அதை கூட அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள் எனவும் நுட்பமாகக் காட்டுகிறது.

மொத்தம் ஆறு போட்டிகள், நானூற்று ஐம்பத்தி ஆறு போட்டியாளர்கள், வெற்றி பெறும் ஒரேயொருவருக்கு நானூற்று ஐம்பத்தி ஆறு பில்லியன் பணம். போட்டிகள் என்ன?, அதனால் விளையப் போகும் விபரீதங்கள் என்ன? இது எதுவுமே தெரியாமல் மொத்த கூட்டமும் வண்டி ஏறுகிறது. முதல் போட்டி ‘Red Line… Green Line’, சிறுவர்கள் விளையாடும் சாதாரணமான விளையாட்டு தான். ஆனால், போட்டியில் தோற்பவர்கள் சக போட்டியாளர்கள் கண்முன்னே சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் ரத்த உடல்களில் மிதித்தும் ஏறி விழுந்தும் ஏனையோர் இலக்கை அடைகிறார்கள், அதாவது உயிர் பிழைக்கிறார்கள். இந்த விளையாட்டை இப்படியும் நினைத்துப் பாருங்கள், ‘சாலையில் ரெட் சிக்னலை தாண்டி நாம் நம் வாகனத்தை இயக்கினால், அங்கேயே சுட்டுக் கொல்லப்படுவோம்என்றால், யாராவது போக்குவரத்து விதிகளை மறப்போமா என்ன?. இது இயக்குநரின் கேள்வியாக கூட இருக்கலாம்.   

இப்படி அடுத்தடுத்த ஐந்து போட்டிகளும் உயிரை பணையம் வைத்து விளையாடுங்கள் என்று போட்டியாளர்களை உந்துகிறது தலைமேல் தொங்கி கொண்டிருக்கும் கட்டுக்கட்டான பணம். இன்னொரு பக்கம் அதே தலைக்கு குறிவைத்து காத்திருக்கும் துப்பாக்கிகள். ஐந்து போட்டிகளும் சிறுவர்களுக்கானது தான், அதன் மூலம் இந்தச் சமூகம் குழுவாக எப்படி இயங்க வேண்டும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, நம்பிக்கை துரோகம், சுயநலம் என எல்லாவிதமான தனிமனித உண்மையான மனநிலையையும் கோட்பாடுகளையும் வெளிகாட்டுகிறது.

அதேநேரத்தில் போட்டிகளில் தோற்றால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும் கூட, அங்கிருக்கும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்துகொண்டு ஒருவரையொருவர் அடித்துக்கொள்கிறார்கள். ஆக இதுதான் மனிதர்களிடத்தில் இருக்கும் அடிப்படை பிரச்சினை, இதற்கு எந்த தீர்வும் கிடையாது கிடைக்கவும் செய்யாது. எல்லாருக்கும் எல்லாம் சமமாக கிடைத்துவிட்டால் இந்த பூமி எப்படி இயங்கும்?, எதாவது சுவாரஸ்யங்கள் இருக்குமா..? தத்துவம், கோட்பாடு, கொள்கை, கல்வி, பணம், பசி, வறுமை, மருத்துவம் உட்பட அனைத்துமே பூஜ்ஜியமாகிவிடும். இந்த சமநிலையை உடைக்கும் வர்க்கத்தினர் தான் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் அதிகாரம் மிக்கவர்களும்.

அப்படியானவர்கள் இந்த சீரிஸின் மறைமுக பாத்திரங்களாக (பாஸ்) வருகின்றார்கள், அவர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு உயிரை விடும் எளிய மனிதர்களை கண்டு ஆனந்தக் கூச்சலிடுகின்றனர். இதில் நியாயம், தர்மம் எல்லாம் அவர்களுக்குக் கிடையவே கிடையாது, பொழுதுபோக்கு மட்டுமே. பணத்திற்காக ஓடும் எளிய மனிதர்களில் இருவகை உண்டு, ஒருதரப்பு பந்தய குதிரைகள், இன்னொரு பிரிவு பொதிசுமக்கும் கழுதைகள். இந்த சீரிஸில் போட்டியாளர்கள் பந்தயக் குதிரைகளாக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களில் சிலர் மனசாட்சியுடனும், சில நேரங்களில் நரித்தனத்துடனும் இருவிதமான மனித இயல்புகளையும் வெளிப்படுத்துகின்றனர். இன்னொரு தரப்பான பொதிசுமக்கும் கழுதைகள் தான் இந்த சமூகத்தின் சாபக்கேடு, அவர்கள் நம்முடனே இருப்பார்கள், ஆனால் நாம் அவர்களை அடையாளம் காண முடியாது. இந்த சீரிஸில் அவர்கள் சக மனிதனை அற்ப காரணங்களுக்காக சுட்டுத் தள்ளும் சிவப்பு உடையணிந்த கூலிகளாக உருவகப்படுகின்றனர். அவர்களுக்குப் போட்டியாளர்களை போல அதிக பணம் தேவையில்லை; ஆனால், பாதுகாப்பான முறையில் எதை வேண்டுமானாலும் செய்து பணம் ஈட்டலாம் என நினைப்பவர்கள்.

இந்த சீரிஸை பார்ப்பவர்களின் கோபமும் ஆற்றாமையும் போட்டியாளர்கள் மீதுதான் இருக்கும். துளியளவும் சிவப்பு உடையணித்து வரும் கழுதைகள் பக்கம் திரும்பாது. இதைதான் இயக்குநர் Hwang Dong-hyuk-ம் இந்த சீரிஸ் மூலம் சொல்ல வருகிறார். கூடவே அதிகார வர்க்கத்தின் முன்னால் குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் வித்தியாசம் கிடையாது, அவர்கள் நினைத்தால் இருதரப்பையும் கொன்று புதைத்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறமும் தெரியாது, மனிதமும் கிடையாது

இதையெல்லாம் தாண்டி இந்த வெப் சீரிஸ் அரசியல், நாத்திகம், வர்க்க முரண்பாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் குறித்த சமூகத்தின் இழிவான மதிப்பீடுகள் இதுபோன்ற பிரச்சினைகளையும் போகிறப் போக்கில் சொல்லி அடிக்கிறது. சில காட்சிகள் பார்ப்பதற்கு கொஞ்சம் டெரராக இருந்தாலும் நம்மால் அதை சகித்துக்கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். ஏனெனில் நாள்தோறும் ஏராளமான விபத்து, கொலை, அடிதடி போன்ற வன்முறைகள் நிறைந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பார்த்து, நம் மனதை Squid Game கதைக்களத்துக்கு ஏற்ப பழக்கிக் கொண்டோம்

 

விமர்சனம் :- களந்தை அப்துல் ரஹ்மான்

 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry