புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கு இடைக்காலத்தடை! உள்ளாட்சித் தேர்தல் தேவையா, பிரதான கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி என்ன?

0
25

என்.ஆர்.காங்கிரஸ், பா... கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

புதுச்சேரியில் இதுவரை 1968 மற்றும் 2006 என இருமுறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்வான பிரதிநிதிகள், பதவிக்காலம் முழுதும் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என பல வடிவங்களில் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். எதுவும் நடக்காமல் அவர்களது பதவிக்காலம் முடிய, கடந்த ஆட்சியில் தனக்கு அதிகாரம் வேண்டும் என முதலமைச்சரே போராடும் சூழல் ஏற்பட்டது.

இப்படியான சூழலில், நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு, புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை, நவம்பர் 2,7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும் தொடங்கியுள்ளது. ஆனால் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வார்டு சீரமைப்பிலும், சுழற்சி முறையில் தேர்வு செய்வதிலும் பல குளறுபடிகள் உள்ளன என்பது பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது.

கட்சி பேதமின்றி புதுச்சேரி மாநிலத்தின் 33 எம்.எல்..க்களும் உள்ளாட்சித் தேர்தல் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். ஆனால், சில இயக்கங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்துகின்றன. எனவே இந்த விவகாரம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை தெளிவுபடுத்த, நகராட்சிகளின் நிதி நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையான் பேட்டை, உப்பளம், நெல்லிதோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய 7 தொகுதிகளை உள்ளடிக்கியதுதான் புதுச்சேரி நகராட்சி. இந்த நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நான்கு மாத சம்பள பாக்கி உள்ளது (ஆணையரைத் தவிர). ஆயிரம் ரூபாய் பணிக்குக் கூட நிதி ஒதுக்கும் நிலையில் நகராட்சி இல்லை. தெரு நாய்களைப்  பிடிக்க வாகனம் வாங்கக் கூட நகராட்சியிடம் நிதி இல்லாத சூழல்

இதுபோன்ற நிதி நெருக்கடியில், ஒருவேளை உள்ளாட்சித் தேர்தல் நடந்து மேயர் தேர்வு செய்யப்பட்டால், கவுன்சில் கூட்டத்தை நடத்தக்கூட இடம்கிடையாது. மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கான ஊதியம், மேயருக்கான அலுவலகம், அதற்கான தளவாடங்கள், மேயர் அலுவலக ஊழியர்களுக்கான ஊதியம், மேயர் வாகனம் போன்றவற்றை வழங்கும் அளவுக்கு நிதி நிலை சீராக உள்ளதா? என்பது முக்கியமானதொரு கேள்வியாக உள்ளது

அதேநேரம், உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் மத்திய அரசு நிதி தரும் என்ற வாதத்தை சில இயக்கங்கள் முன்வைக்கின்றன. 2006-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பிறகு மத்திய அரசு எந்தவொரு நிதியும் வழங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி உறுப்பினராக இல்லாததே இதற்குக் காரணம். இதேநிலைதான் தற்போதும் நீடிக்கிறது. எனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தினாலும் மத்திய அரசு நிதி வழங்காது.

உள்ளாட்சித் தேர்தல் வேண்டாம் என எம்.எல்..க்கள் சொல்வதற்கான காரணம்தான் என்ன? என்பதை பார்க்கலாம். புதுச்சேரியில் சட்டமன்ற தொகுதி என்பது, தமிழ்நாட்டைப் போல பரப்பளவில் பெரிதாக இருக்காது. சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் அணுகமுடியாத சூழலும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் மூலம் நகராட்சி கவுன்சிலராக தேர்வாகும் நபர், தனது மேற்பார்வையில், சாலை சீரமைப்பு, சாக்கடை அமைப்பது, ஏற்கனவே உள்ள சாக்கடைகளை தூர்வாருவது, தனது அதிகாரத்துக்கு உள்பட்ட நீர்நிலைகளை தூர்வாருவது போன்றவைகளைத் தான் செய்ய வேண்டியிருக்கும். தற்போது இவை அனைத்தையுமே சட்டமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

நிதி நெருக்கடி காரணமாக எம்.எல்..க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுமா? என்பதிலேயே சந்தேகம் உள்ள நிலையில், கவுன்சிலர்களின் தேவை என்ன? என்று எம்.எல்..க்கள் கேட்கிறார்கள். நகராட்சிகளுக்கென நிதி ஒதுக்கி விட்டு, பின்னர் தேர்தலை நடத்தினால், நோக்கம் வெற்றியடையும், மக்களுக்கும் நன்மை பயக்கும். இல்லையென்றால் வெற்று அரசியல் செய்வதற்கு மட்டுமே இந்தத் தேர்தல் பயன்படும்.

இதனிடையே, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என 2012-ம் உயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் தற்போதைய இட ஒதுக்கீடு அறிவிப்பு, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்பதே பிரதான கட்சிகளின் குற்றச்சாட்டாகும்.

இதைக் கண்டித்தும், இதற்கு காரணமான என்.ஆர்.காங்கிரஸ், பா... கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் துச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், தி.மு.., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுவிடுதலை சிறுத்தைகள், .தி.மு.. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முழு அடைப்பில் பங்கேற்றுள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முறைப்படியானதாக இல்லை என்று, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவசர வழக்காக இதை விசாரித்த நீதிமன்றம், வரும் 21-ந் தேதி வரை, தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவைக்குமாறு புதுவை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றங்கள் உத்தரவிடுவதும், அதை எதிர்த்து அரசியல் கட்சிகள் மனுதாக்கல் செய்வதும், பின்னர் இடைக்காலத் தடை பெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. புதுச்சேரிக்கு உள்ளாட்சித் தேர்தல் தேவையா?, தேர்தல் நடத்தினால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான அதிகார வரம்பு?, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது எவ்வாறு? உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, நீதிபதி தலைமையிலான குழு அமைத்து தீர்வு காண வேண்டும். அவர்களது பரிந்துரையை செயல்படுத்துவது மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry