கடுமையான நிலக்கரி தட்டுப்பாட்டை நோக்கித் தள்ளப்படும் இந்தியா? மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என மத்திய அரசு அச்சம்!

0
16

இந்தியாவின் மின்சார தேவை அதிகரித்துவரும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

நாட்டின் மொத்த மின் உற்பத்தி 388 கிகா வாட். இதில் 208.8 கிகா வாட், அதாவது 54%  மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அனல் மின் நிலையங்கள் தான் இந்தியாவின் மின்சாரத்திற்கு பெருமளவில் ஆதாரங்களாக உள்ளன. எப்போதும் 14 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பில் இருக்கும். ஆனால் தற்போது,  4 நாட்களுக்கு போதுமான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது

நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் பெய்த கனமழை, நிலக்கரியின் விலை சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதால் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஆகியவையே மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்தற்கான காரணங்களாக மத்திய அரசு கூறுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் வட மாநிலங்களில் மின்தடை ஏற்படத் தொடங்கிவிட்டது

டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் மின்தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் 20 அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாபில் மூன்று அனல் மின் நிலையங்கள், மகாராஷ்டிராவில் 13 அனல் மின் நிலையங்கள் உள்பட அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது தவிர உத்தரபிரதேசத்தில் 8 மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படுவதை நிறுத்திவிட்டன என்று தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டையும் இந்த தட்டுப்பாடு பாதிக்கலாம். ஏனென்றால், கொல்கத்தாவின் ஹல்தியா துறைமுகத்திலிருந்தும், ஒரிசா, சத்தீஸ்கரிலிருந்தும் தமிழகத்துக்கு நிலக்கரி வருகிறது. தமிழ்நாட்டில் இருப்பது திறந்த வெளி சுரங்கங்கள் தான். இங்கு 100அடியில் நிலக்கரியை சேகரிக்க முடியும். அப்படி சுரங்களில் தண்ணீர் இருந்தால் அதை வெளியேற்ற முடியும். தமிழகத்திற்கு ரயில், கப்பல்களிலிருந்து மேற்கண்ட மாநிலங்களிலிருந்து நிலக்கரி வருகிறது. இதில் வேகன் ஒதுக்கீடு பிரச்னையால் தமிழ்நாட்டுக்குத்தான் பாதிப்பு. ஒரு நாளைக்கு 8 அல்லது 9 வேகன் ஒதுக்கீடு செய்யும்நிலையில், அதன் கொள்ளளவு 3400 டன்தான் இருக்கும். இருந்தாலும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் தமிழகம் சற்றே பிழைக்கிறது. தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு பாதிப்பில்லைஎன்று கூறியிருக்கிறார்.

முன் காலங்களில் மழையின் காரணமாக சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வராமல் இருந்ததில்லை. சுரங்கங்கள் தனியார் வசம் சென்றதால், அவர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருகிறார்கள் என தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நிலக்கரி தட்டுப்பாடு அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்கோ, அல்லது நான்கு முதல் 5 மாதங்களுக்கோ நீடிக்கக்கூடும். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாக உள்ளது என்று மத்திய மின் துறை அமைச்சர் ராஜ் குமார் சிங் கூறியுள்ளார். சீனாவிலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெளிநாட்டு நிலக்கரி நிறுவனங்களுக்கு கிராக்கி அதிகமாகியுள்ளது. இதனால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமலும், உள்நாட்டில் நிலக்கரி இல்லாமலும் இந்தியா தவிக்கிறது.

இந்நிலையில், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தேசிய அனல்மின் கழக அதிகாரிகள் உள்பட பல்வேறுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். நாட்டில் உள்ள நிலக்கரி கையிருப்பு, மின்சார தேவை மற்றும் உற்பத்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry