எழுவர் விடுதலையில், தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக ஏழு பேரையும் விடுதலை செய்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 7.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநரை ஒதுக்கிவிட்டு, ஆணை பிறப்பித்ததுபோல, எழுவர் விடுதலையிலும் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் அரசியல் ஆதாயம் தேட முடியுமா? என திமுக ஆராய்ந்து வரும் நிலையில், ஏழு பேரையும் விடுவிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. திமுக விடுதலைக்காக குரல் கொடுக்க, அதற்கு நேர் எதிர் நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்கிறது. தேர்தல் வரும் நேரத்தில், காங்கிரஸ் இவ்வாறு செயல்படுவது, திமுக, ஈழத்தமிழர்களின் எதிரி என்ற எண்ணத்தை மேலும் வலுவாக்கும் என, ஸ்டாலின் அச்சப்படுகிறார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது, இறுதிகட்டப் போரில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மனதில் நீங்கவே இல்லை. அவ்வாறு இருக்க, எழுவரை விடுதலை செய்யக்கூடாது என காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பது, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்டாலின் நம்புகிறார். எனவே, 7 பேர் விடுதலை செய்யப்பட்டால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழட்டிவிடப்படலாம் என்று உறுதியாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், எழுவர் விடுதலையிலும் நியாயமற்ற, அநீதி அரசியல் நடப்பதாக தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி TNTV தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைமை செய்தி ஆசிரியரும், தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான வளர்மெய்யறிவானிடம் வேல்ஸ் மீடியா சார்பாக பேசினோம். “பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யுங்கள், பேரறிவாளனையாவது விடுதலை செய்யுங்கள் என்று அறிவார்ந்த சிலரது குரலை கேட்க முடிகிறது.
எழுவர் விடுதலை என்பது, உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு எழுதப்பட்டுவிட்ட ஒரு வழக்கு. அதன்படி எழுவரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. முறைப்படி விடுவித்துக் கொள்ளலாம் என இரண்டு முறை உத்தரவாகி விட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விடுதலையும் அறிவித்து விட்டது.
ஜெயலலிதா அரசைப்போன்றே, எடப்பாடி பழனிசாமி அரசும், எழுவர் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவிட்டது. 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், பேரறிவாளன் நீதிமன்றம் செல்கிறார். இன்னுமா விடுதலை செய்யவில்லை? என்று கேட்கிறது உச்ச நீதிமன்றம். “இதற்கும் மேலும் ஆளுநர் தாமதித்தால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்கிறார்கள் நீதிபதிகள்.
பேரறிவாளனை மட்டும் விடுதலை செய் என்பது உச்ச நீதிமன்றத்தின் முடிவல்ல, கேள்வியும் அல்ல. யார் மனுத் தாக்கல் செய்கிறார்களோ, நீதிமன்றம் அந்த மனுதாரரின் பெயரைச் சொல்லிதான் தீர்ப்பைச் சொல்லும். அதற்காக, பேரறிவாளனை மட்டுமாவது விடுதலை செய்யுங்கள் என கோரிக்கை வைப்பதும், பேரறிவாளனை மட்டுமே முன்னிலைப்படுத்தி மீதமுள்ள 6 பேர் விடுதலைக்குத் தகுதியற்றவர்கள் என்று சொல்லாமல் சொல்வதும் அநீதி அல்லவா?
ஏழு பேரையுமே விடுதலை செய்யத்தான் சட்டப் பேரவையும், அமைச்சரவையும் தீமானங்கள் நிறைவேற்றி உள்ளது. நாமும் அதைத்தான் வலியுறுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு ஒருவரை மட்டும் விடுதலை செய்யக்கோருவது, எழுவரையும் சிறையிலேயே வைக்க செய்யப்படும் எதிரிகளின் அரசியலுக்கு வழி வகுத்து விடும்”. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry