புதுச்சேரியில் கொத்தடிமை சிறுமிகள் கூட்டு பலாத்காரம்! மவுனம் சாதிக்கும் அரசியல் கட்சிகள்! பின்னணி என்ன?

0
61

தமிழ்நாடு, புதுச்சேரியில், பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள், நாளிதழ்களில் இடம்பெறாத நாள் குறைவு என்றாகிவிட்ட நிலையில்(போக்சோ சட்டத்தில் கைது), இதுபற்றி கண்டுகொள்ளாத  அரசியல் தலைவர்கள், ஹத்ராஸ் போன்ற வெளிமாநில சம்பவங்களுக்காக மட்டும் பொங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸை விட நெஞ்சை பதற சம்பவங்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் நடந்துள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே வாத்து பண்ணையில், 5 சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து, கட்டிப்போட்டு, 6 பேர் கூட்டு பலத்காரம் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக வாத்துப்பண்ணை உரிமையாளர், அவரது மகன் உள்பட 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்தச் சம்பவத்தை, உள்ளூர் அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புதுச்சேரி இறைவி குழும நிறுவனர் காயத்ரி ஸ்ரீகாந்திடம் வேல்ஸ் மீடியா சார்பாக பேசினோம்.

“பாதிக்கப்பட்ட சிறுமிகள் விளிம்பு நிலை சமூகத்தை் சேர்ந்தவர்கள். இவர்கள் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டுள்ளனர். சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகளில் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஹத்ராஸ் போன்ற வெளிமாநில பலாத்கார சம்பவங்களுக்கு முதலமைச்சரே மெழுகுவர்த்தி ஏந்திவாறு நியாயம் கேட்டு போராடினார். ஆனால், அவரது மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இதுவரை நிவாரணம் கூட வழங்கவில்லை.இந்தச் சம்பவம் பற்றி உயர்மட்டக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புதுச்சேரி குழந்தைகள் நல கமிட்டிக்கு ஓய்வுபெற்ற ஜெயிலரான ராஜேந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.இவருக்கு 74 வயதாகிறது. காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு, குழந்தைகளின் உளவியலும், பாதிக்கப்படும் சிறுமிகளை உடல் மற்றும் உளவியல் ரீதியாக எப்படி கையாள்வது பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமிகள் எப்படி ஒரு ஆணிடத்தில் பகிர்ந்துகொள்ள முடியும்.

டாக்டர் தேவிப்பிரியா என்பவர் நீதிமன்றத்தை அணுகி, 74 வயதாகும் ராஜேந்திரன், குழந்தைகள் நல கமிட்டி தலைவராக இருக்க தகுதியில்லாதவர் என்பதை முறையிட்டு, மாற்று நபரை நியமிக்குமாறு நீதிமன்றமும் கூறியுள்ளது. ஆனால், அந்த விவகாரத்தில் அரசு மவுனம் காக்கிறது. எனவே, மாநில குழந்தைகள் நல கமிட்டி தலைவராக, விதிமுறைப்படி 65 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மாநில குழந்தைகள் நல கமிட்டி, அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறதே தவிர, குழந்தைகள் நலனுக்காக செயல்படுவதாகத் தெரியவில்லை. நடைபிணமாக வாழும் அந்த 5 சிறுமிகளுக்கு என்ன நியாயம் கிடைக்கப்போகிறது? புதுச்சேரியில் 1098 ‘சைல்ட் லைன்’ செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பாதிக்கப்படும் சிறுமிகள் 1098-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை” என்று கூறினார்.

வில்லியனூர் சம்பவத்தை சாதாரணமாகக் கடந்தபோன புதுச்சேரி, தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், ஹத்ராஸ் பலாத்கார சம்வத்துக்காக பொங்கி எழுந்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதப்படுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில இயக்கங்கள், சில கட்சிகள் மட்டும் கண்டன அறிக்கையோடு தங்கள் பொறுப்பை துறந்துவிட்டனர். வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் இதுபோன்ற விவகாரங்களில் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் அவர்களும் இந்த சம்பவத்தில் மவுனமாகவே இருக்கின்றனர். கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி நடைபிணமாக வாழும் 5 சிறுமிகளுக்கு நீதி கிடைக்க புதுச்சேரி அரசும், இந்தச் சமூகமும் என்ன செய்யப்போகிறது?

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry