ராகுல் தகுதியில்லாதவர் என்ற ஒபாமா கருத்தில் தவறில்லை! அரசியல் அறிவே இல்லை என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம்!

0
15

ராகுல் காந்தி பற்றிய ஒபாமாவின் கருத்தில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர்களே கேட்கத் தொடங்கிவிட்டனர். அரசியலில் கருத்தாழமில்லாத ஒருவரை வைத்துக்கொண்டு கட்சியை எவ்வாறு கரைசேர்க்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, `எ பிராமிஸ்டு லேண்ட்’ என்ற பெயரில் தனது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில், ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ள அவர், `பதற்றத்தோடு இருப்பவர்; நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர்போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமலிருக்கிறார்’ என்று விமர்சித்திருக்கிறார்.

தனிநபரின் கருத்து பற்றி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதோடு காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டது. ஆனால், தொடர் தோல்விகளால் தலைவர்கள் மத்தியில் ஒரு வெறுமை ஏற்பட்டிருக்கிறது. பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்று, மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சியில் அமரவிடாமல் செய்துவிட்டது. இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸார் சிலரிடம் பேசியபோது “ராகுலின் தகுதியில்லாத தலைமையே இதற்குக் காரணம். ஒபாமா விமர்சித்ததில் என்ன தவறு. தன்னம்பிக்கை அற்றவராகவும், ஈர்ப்பு இல்லாமலும் இருக்கிறார், அதைத்தான் அவரது நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது.

போதிய அரசியல் அறிவு இல்லாத ஒருவர், எப்படி செயல்படுவாரோ, அப்படித்தான் ராகுலின் தினசரி நடவடிக்கைகள் இருக்கின்றன. இதை பலவீனம் என்பதா? அல்லது துருதுரு செயல்பாடு என சொல்வதா? என்று தெரியவில்லை. அவர் அரசியலில் முழுமையான ஈடுபாட்டுடன் இல்லை. பீகார் போன்ற மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்ள 6 மாதங்களுக்கு முன்பாகவே களப்பணியை தொடங்கியிருக்க வேண்டும். அதைவிடுத்து, மோடியையும், சீனாவையும் பற்றி மட்டுமே அவர் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு சூழலை புரிந்துகொள்ளும் திறன் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

Also Read : காங்கிரஸ் இல்லாத இந்தியா? ‘MODI BRAND-ஆல் 5 மாநிலங்களுக்குள் சுருங்கிய காங்கிரஸ்!  மூழ்கும் கப்பலை காப்பாற்ற தேவை ‘பட்டேல் போன்ற தலைவர்!

மக்களவை தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு ராகுலின் தலைமையே காரணம். முறைப்படி இல்லாவிட்டாலும், வேறுவழியில்லாமல் காந்தி குடும்பத்தின் கையில் கட்சி சிக்கியிருக்கிறது. ராகுலின் அணுகுமுறையில் பலவீனமும் குறைபாடும் உள்ளது. நாட்டின் பழமையான அரசியல் கட்சியை வழிநடத்த, இவரது பாணி எடுபடாது. இவர் செய்யும் சமூக ஊடக அரசியல், பார்வைக் குறைபாடு உடையவர்களின் செயல்பாடு போன்றே உள்ளது என அவர்கள் பொங்கித் தீர்த்தனர்.

அடையாளத்தை மறைத்து சிலர் பேச, கபில் சிபல், தாரிக் அன்வர், கார்த்தி சிதம்பரம் போன்றோர் வெளிப்படையாகவே குமுறி உள்ளனர். “எல்லாம் நன்றாக உள்ளன என்று காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனால், பிஹார் தேர்தல் முடிவுகள், மக்கள் காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. சுயபரிசோதனை செய்துகொள்ளும் காலம் முடிந்துவிட்டது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

“காங்கிரஸ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம், சிந்திக்க வேண்டிய நேரம், ஆலோசிக்க வேண்டிய நேரம், செயல்பட வேண்டிய நேரம்” என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/KartiPC/status/1328206607247765504

காங்கிரஸ் தலைமையின் தளர்ச்சி, ராகுல் மீதான தலைவர்களின் அதிருப்தி போன்றவை, கட்சிக்கு உள்ளேயே காந்தி குடும்பத்துக்கு எதிராக மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தலாம். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தொய்வு, வரும் 5 மாநில தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Also Read : காங்கிரசில் வெடித்தது கலகம்! காந்தி குடும்பத்துக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry