புதுச்சேரி கிரிக்கெட் மைதான முடக்கம்! மத்திய அரசுடன் மோதுகிறாரா ஆளுநர்? உள்ளூர் வீரர்கள் புறக்கணிப்பு என போராளிக்குழு புகார்!

0
7

புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகிறது. ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுடன் மோதுவதாகவே தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா-தான் பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பிசிசிஐ கொடுத்த அனுமதியே தவறு, பிசிசிஐ அரசு விதிகளை மதிக்கவில்லை என்ற ரீதியி்ல் ஆளுநர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி, துத்திப்பட்டு கிராமத்தில் சீசெம் (Siechem) டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் அமைத்திருக்கும் சீசெம் கிரிக்கெட் மைதானம், சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இங்கு போட்டிகள் நடத்த பிசிசிஐ அனுமதித்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ரஞ்சி உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.

ஆனால், சீசெம் உரிமையாளர் தாமோதரன், அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் அமைத்திருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதையடுத்து, சீசெம் நிறுவனம் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், தற்போது நடைபெற்று வரும் T-20 போட்டியை நிறுத்தவும் கிரண் பேடி உத்தரவிட்டார். இதுபற்றி வேல்ஸ் மீடியா  ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. மாநில வளர்ச்சியை ஆளுநர் கவனத்தில் கொள்வது அவசியம் என நாம் குறிப்பிட்டிருந்தோம்.

Also Read: விஸ்வரூபமெடுக்கும் கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரம்! முதலமைச்சர் தொடங்கியதால் முடக்கிய ஆளுநர்! தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் அச்சம்! 

இந்நிலையில், ஆளுநர் உத்தரவுப்படி மைதானத்தின் வாயிலை அடைக்க வந்த அதிகாரிகளுடன், சீசெம் மைதான நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். இந்த பரபரப்புக்கு மத்தியில், மைதான விவகாரம் பற்றி தங்கள் தரப்பு கருத்தை முன்வைக்க விரும்புவதாக புதுச்சேரி போராளிகள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர்  வேல்ஸ் மீடியாவிடம் தெரிவித்தார்.

அவரிடம் பேசியபோது, “சீசெம் மைதானம் விதிகளை மீறிதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1968-ல் பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோஷியேஷன் தொடங்கப்பட்டது. 2004-ல் தற்போதுள்ள கிரிக்கெட் அசோஷியன் ஆஃப் பாண்டிச்சேரி (CAP) ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த அமைப்பு வாடகைக்கு மைதானத்தை எடுத்து போட்டியை நடத்தியது. பிறகு 2016-ல் இல்லாத வசதிகளை இருப்பதாக முதலமைச்சர் பிசிசிஐ-க்கு கடிதம் கொடுத்தார். இதையடுத்தே CAP-க்கு ரஞ்சி போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி கொடுத்தது.

குத்தகை இடத்துக்கான லீஸ் அக்ரிமென்ட் ரிஜிஸ்டர் செய்யவில்லை. புதுச்சேரி அணியி்ல் வடமாநிலத்தவர்கள் விளையாடுகிறார்கள். இருப்பிட அடையாளத்தில் முறைகேடு செய்துதான் அவர்கள் அணியில் இடம்பெற்றனர். இதை சுட்டிக்காட்டியதால் பலர் நீக்கப்பட்டனர். இந்த விவகாரத்தை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். மைதானம் அமைக்க பிசிசிஐ கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கிறது. புதுச்சேரி அணியில் உள்ளூர் வீரர்களே இடம்பெற வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தினார்.

பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் நடக்கும்போது, சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான். அதை அரசும், ஆளுநரும் சுட்டிக்காட்ட, முதலீட்டாளர்கள் சரிசெய்வதுதான் நடைமுறை. அதைவிடுத்து, திட்டத்தையே முடக்குவது என்ற ஆளுநரின் போக்கு, பலவித ஐயங்களை ஏற்படுத்துவதை தவிர்க்கமுடியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry