ஆத்திகத்தை முன்வைத்து தமிழக அரசியல் களத்தை பாஜக அதகளப்படுத்தி வருகிறது. வேல் யாத்திரை தொடர்பாக வானதி சீனிவாசன் சில கருத்துகளை கூற, அமித் ஷா வருகையை முன்வைத்து எல். முருகன் ஆவேசமாகப் பேச, அதிமுக வெகுண்டெழுந்துவிட்டது. பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாகவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
கொரோனா பரவலை காரணம் காட்டி பாஜக-வின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆனாலும், தடையை மீறி திட்டமிட்டபடி கடந்த 6-ந் தேதி தொடங்கி யாத்திரையை நடத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன். வேல் யாத்திரையை முடித்து வைக்க, டிசம்பர் 6-ந் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வர இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்வினையை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.”
இந்த பரபரப்புக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 21-ந் தேதி தமிழகம் வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த எல். முருகன், “அமித் ஷா வருகையால் அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் போகப் போகத் தெரியும். அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சியினருக்கு பயத்தைக் கொடுப்பதாக அமையும்” என்றார்.
தடையை மீறி ரத யாத்திரை, வானதி சீனிவாசன், எல், முருகன் போன்றோரின் கருத்துகள், அதிமுக-வை ஆத்திரமூட்டச் செய்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில், கறுப்பர் கூட்டம் ஆனாலும், காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும், ஒருமைப்பாட்டை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என விமர்சித்துள்ளது.
“சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது, ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழிபடுவதை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்பவர்கள் உணர வேண்டும்” எனவும் நமது அம்மா நாளிதழ் இடித்துரைத்துள்ளது.
இவ்வாறு சில விரிசல்கள் இருந்தாலும், கூட்டணி தொடரும் என்றே இருதரப்பும் கூறி வருகிறது. வரும் தேர்தலில், அதிகபட்சம் 60 இடங்களில் போட்டியிட்டு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே பாஜக–வின் இலக்காக இருக்கிறது. தமிழகத்தில் தங்களுக்கும் செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டவே வேல் யாத்திரை கனஜோராக நடந்து வருகிறது. அதிமுக 20-ல் நிற்க, 40 தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்பதை முன்வைத்து இப்போதே காய்கள் நகர்த்தப்படுகின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற பாஜக உதவுவதை அதிமுக தலைமை உணர்ந்துள்ளது. ஆனால், இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜக கூட்டணி வேண்டாம் என்றே கருதுகின்றனர். எனவே, மாற்று வியூகத்தையும் பாஜக வகுத்துள்ளது. அதாவது, மூன்றாவது அணி அமைத்து, அதில் பா.ம.க., தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த அணிக்கு நடிகர் ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைக்கவும் திட்டமிடல் நடந்து வருகிறது. இப்படியொரு அணி அமைந்தால், வட மாவட்டங்களில் திமுக, அதிமுக–வுக்கு பலமான பின்னடைவு ஏற்படும். ஆனால், அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry