ராகுல்காந்தி பொய் சொல்கிறார்! பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடுமையான விமர்சனம்!

0
87

காங்கிரஸ் கட்சி முதலில் தன்னைப்பற்றி கவலைப்படட்டும் என்று ராகுல் காந்திக்கு கூர்மையான பதிலடி கொடுத்துள்ள உ.பி. முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி, ராகுல் காந்தி தனது கட்சிக்கு(BSP) கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக சாடியுள்ளார்.

டெல்லியில் நடந்த “தி தலித் ட்ரூத்” புத்தக வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகலந்து கொண்டு பேசும்போது, “உத்தரப்பிரதேச தேர்தலின் போது நாங்கள் பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கு கூட்டணிக்காக அழைப்பு விடுத்தோம். மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கவும் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. சிபிஐ, அமலாக்கப்பிரிவு, பெகாஸஸ் போன்ற காரணங்களால் தேர்தல் சமயத்தில் அவர் போராடவில்லை. அதனால் பிஜேபிக்கு தெளிவான ஒரு பாதையை மாயாவதி அமைத்துக் கொடுத்தார்” என்று பேசினார்.

இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும். அவர்களால் பிஜேபியை வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாமல் இருக்கும்போதும் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால், இப்படி ஏதேனும் குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ராகுல் காந்தி கூறியது முற்றிலும் தவறானது. காங்கிரஸ் முதலில் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டும். எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. உங்கள் கட்சியையே ஒழுங்காக நடத்த முடியவில்லை. இதில் மற்ற கட்சிகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?

பகுஜன் சமாஜ் கட்சியின் நற்பெயருக்கு ராஜிவ் காந்தியும் களங்கம் ஏற்படுத்த முயற்சித்தது உண்டு. பிரியங்கா காந்தியும் அதையே செய்கிறார். அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு நான் அஞ்சுவதாக அவர் கூறுகிறார். இது பொய்யான குற்றச்சாட்டு. எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று நிரூபித்திருக்கிறோம்.

காங்கிரஸ் இல்லா இந்தியா மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பணியில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் ஈடுபட்டுள்ளது. சீனாவில் கம்யூனிஸ்ட்டைப் போல இந்தியாவில் பாஜக என்ற ஒரு கட்சி மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தியைப் போல பிரதமரை கட்டியணைக்கும் கட்சி நாங்கள் அல்ல” என்று மாயாவதி காட்டமாக விமர்சித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று தலைவர்கள் சிவர் முயற்சி எடுத்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் பேச்சு உத்தரப்பிரதேசத்தில் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry