எங்க தலைவரை கொன்னது யாரு? திமுக-வுக்கு பயந்து வாயை மூடிக்கொண்ட காங்கிரஸ்!

0
593

கருணை அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன. பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பதாகக் கூறும் காங்கிரஸ் கட்சி, திமுக-வுக்கு பயந்து வாயில் வெள்ளைத் துணி கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளது.

1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிலையில், 1991 ஜூன் 11-ந் தேதி பேரறிவாளன் கைது செய்யப்படுகிறார். அதுமுதலே, பேட்டரி வாங்கிக் கொடுத்தது உண்மை – எதற்காக என்பது தனக்குத் தெரியாது என்பதையே பேரறிவாளன் தொடர்ந்து கூறி வந்தார்.

பேரறிவாளனைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கருணை மனுவை ஆளுநர் கிடப்பில் போட்ட நிலையில், 142 ஆவது விதியின் படி உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது.

திமுக-வுக்கு பயந்து பின்வாங்கும் காங்கிரஸ்

“பேரறிவாளனின் தடா ஒப்புதல் வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவுசெய்யத் தவறினேன். தனக்கு ராஜீவ் கொலை சதி குறித்து முன்கூட்டியே ஏதும் தெரியாது என்று அவர் சொன்ன உயிர்மையான வரிகளை, வழக்கின் விசாரணைப் போக்கைக் குலைத்துவிடும் எனக் கருதி பதிவுசெய்யாமல் விட்டுவிட்டேன்” என விசாரணை அதிகாரி தியாகராஜன் பொதுவெளியிலேயே சொன்னார். இது வழக்கின் விசாரணைப் போக்கையே மாற்றியது. பேரறிவாளன் விடுதலைக்கு தியாகராஜன் கருத்து மிகவும் உதவியாக இருந்தது.

ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரது கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரி, வாக்குமூலத்தை மாற்றி எழுதினேன் என பொதுவெளியில் சொல்கிறார் என்றால், இதைப்போன்ற எத்தனை குளறுபடிகளை அவர் செய்திருக்கக்கூடும் என்பதை விசாரிக்க வேண்டாமா? இவர் நடத்திய விசாரணைகள் ஐயத்துக்கு அப்பாற்பட்டதில்லையே?

பேரறிவாளன் விசாரணையை பொறுத்தவரை வழக்குக்கு அனுகூலமாக தியாகராஜன் மாற்றி எழுதினார் என காங்கிரஸ் மவுனித்திருக்குமானால், மற்ற குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் நேர்மையாகத்தான் பதிவு செய்யப்பட்டன என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அப்படியானால், எங்கள் தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற உண்மைக் குற்றவாளிகள் யார்? என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியிருக்க வேண்டாமா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்துவது உண்மையாக இருந்திருக்குமானால், விசாரணை அதிகாரி தியாகராஜனை, விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றக் கதவுகளை தட்டியிருக்க வேண்டும். இதைச் செய்யாமல், பேரறிவாளன் விடுதலைக்கு பாஜக மீது பழி சுமத்துவதும், அவர் குற்றவாளிதான் என்று கூறுவதும் முரண்பாடுகளின் மொத்த உருவாகவே தெரிகிறது. கூட்டணித் தலைமையான திமுக-வுக்கு பயந்து, வாயில் வெள்ளைத் துணி கட்டி போராடுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சாத்தியமானது.

அதிமுக-வால் விடுதலையான பேரறிவாளன்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலை குறித்து 2014 பிப்ரவரி 19-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்த பிறகே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் கூர்மையான பார்வை பதிந்தது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளை நேரில் அழைத்து, வாஞ்சையோடு அரவணைத்து, விடுதலை உறுதி என ஜெயலலிதா தைரியம் சொன்ன காட்சிகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

2014 பிப்ரவரி 18-ல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்குத் தண்டனையை ஆயுளாகக் குறைத்தபோது, குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432-ன் அடிப்படையில், உரிய அரசு தண்டனைக் கழிவு குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் தீர்ப்பு தந்தது. மறுநாளே, அந்த மூவரோடு ஏற்கெனவே அதே வழக்கில் ஆயுள் சிறை அனுபவித்துவந்த நால்வரையும் சேர்த்து எழுவரையும் விடுவிப்பது என அமைச்சரவையில் முடிவெடுத்து அதைச் சட்டமன்றத்திலும் அறிவித்தார் அப்பதைய முதலமைச்சர் ஜெயலலிதா.

இதைத்தொடர்ந்து, குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 435-ல் மத்திய அரசின் ‘கருத்து’ கேட்க வேண்டும் என்றே உள்ளது. எனவே, மூன்று நாட்களில் தனது முடிவை மத்திய அரசு தெரிவிக்கவில்லை எனில், தானே விடுவிக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

மாநில அரசின் கடிதத்துக்குப் பதில் சொல்லாமல், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றது. தான் எடுத்த முடிவுக்காகவும், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியை அமர்த்தி ஜெயலலிதா இறுதிவரை போராடினார். அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதாவின் நேரடிப் பார்வையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த நீட், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஒன்றாக எழுவர் விடுதலை வழக்கும் இருந்தது.

இறுதியில், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 435(1)ல் கூறப்பட்டுள்ள ‘கலந்தாய்வு’ என்பதை ‘ஒப்புதல்’ என்றே கொள்ள வேண்டும் என அரசமைப்புச் சட்ட அமர்வு 2015 டிசம்பர் 2-ல் தீர்ப்பளித்தது. இதனால் ஜெயலலிதாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை நீடித்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் ஜெயலலிதா அமைதியாக இருக்கவில்லை. 2016 மார்ச் 2-ல் மீண்டும் ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதினார். 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் எழுவர் விடுதலை விவகாரத்தில் கூடுதல் ஆர்வம் செலுத்தினார். மத்திய அரசுக்குத் தொடர் அழுத்தங்கள் தந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு எழுவர் விடுதலையில் தீவிர அக்கறை காட்டியது. அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன்படி 2015 டிசம்பர் 30-ல் பேரறிவாளன் அளித்த விடுதலை கோரும் கருணை மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என 2018 செப்டம்பர் 6-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மூன்றே நாட்களில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி, எழுவரையும் விடுவிக்கப் பரிந்துரைத்து, கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

எழுவர் விடுதலையில் ஜெயலலிதாவின் அதிரடி, அக்கறை, சட்டஞானம் போன்றவைகளால், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தற்காப்பு ஆட்டம் ஆடின. எழுவர் விடுதலை முடிவை குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் கீழ் இல்லாமல், மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டக் கூறு 161-ன்படி ஏன் எடுக்கவில்லை என கருணாநிதி ஒரு முறை கேட்டிருந்தார். ஆனால் ஆட்சியில் இருந்தபோது திமுக அதைச் செய்ததா? என்றால் இல்லை.

ஏப்ரல் 19, 2000ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவை நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி பரிந்துரைக்க முடிவு செய்கிறது. மற்ற 6 பேரின் தண்டனையை பற்றி எந்த பரிந்துரையும் செய்யவில்லை. 2010 மார்ச் 30ல் விடுதலை வேண்டி நளினி அனுப்பிய கருணை மனுவை, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு மனிதநேயமின்றி நிராகரித்தது. தசாப்தங்களாக காங்கிரசுடன் கூட்டணியிலிக்கும் தி.மு.க., எழுவரை விடுவிக்க எதுவுமே செய்யவில்லை.

ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய சட்டநுணுக்கத்தின் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை, தங்களுக்கு கிடைத்த வெற்றி என திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது அரசியல் பிழைப்புவாதம். ஏற்கனவே ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் திமுகவும், கருணாநிதியும் எடுத்த நிலைப்பாட்டை, அவர்கள் நடத்திய நாடகத்தை உலகத் தமிழர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

2011ல் 100 நாட்கள் ஆட்சி நிறைவு மற்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் நேரத்தில் ஜெயலலிதா இவ்வாறு பாடினார், இது உண்மையாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

வருந்தாதே ஏழை மனமே

வருங்காலம் நல்ல காலம்

மனம்போல இன்பம் நேரும்

திருநாளும் வந்து சேரும்!

கட்டுரையாளர் :- நடுநாட்டான், பத்திரிகையாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry