கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதியை அகற்றக் கோரும் வழக்கு! விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!

0
289

உத்தரப்பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. இதனைச் சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.

‘மதுராவில் உள்ள கத்ரா கேசவ தேவ் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பதே இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டு. 1669-70ல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணா ஜென்ம பூமியில், ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்றக் கோரி வெவ்வேறு இந்து குழுக்கள் மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கனவே தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை ஏற்க முடியாது என்று கூறிய மதுரா சிவில் நீதிமன்றம், ‘1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ், இவற்றை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில்தான் மசூதி உள்ளது. இந்தக் கோவிலில் பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவத்தில் உள்ளார். இவரது நண்பர் எனக்கூறி, லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்பட 7 பேர், மசூதியை அகற்றக்கோரி மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இவர்களையே வழக்கின் முதல் மனுதாரர்களாக சேர்த்துள்ளது.

“கிருஷ்ண பகவானை வழிபடுபவர்கள் என்ற முறையில் அவருடைய சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி வழக்குத் தொடர எங்களுக்கு உரிமை உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி தவறாகக் கட்டப்பட்டது. சொத்துப் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் ஏற்பட்டது, ஆனால் அந்த சமரசம் சட்டவிரோதமானது, ”என்று மனுதாரர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

16-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ராமர் கோவிலை அகற்றிவிட்டு பாபர் மசூதி கட்டப்பதாக புகார் கூறப்பட்டு வந்தது. இந்து அமைப்புகளால் இந்த மசூதி இடிக்கப்பட்டது. ராமர் கோவில் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதே நேரத்தில் மசூதிக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டது.

ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, உத்தரபிரதேசம் மதுராவில் கிருஷ்ணஜென்ம பூமியை மீட்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை முன்வகைக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் கிருஷ்ண ஜென்ம பூமி நிர் மாண் நியாஸ் என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry