நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் OTT தளம்! சிறுபட்ஜெட் இயக்குநர்கள் மகிழ்ச்சி!

0
285

தனியார் ஓடிடி தளங்களுக்கு போட்டியாக, கேரள அரசும் பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்குகிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், இந்த ஓடிடி தளம் இயங்கும் என கேரள மாநில கலாச்சாரம் மற்றும் சினிமாத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவும் முதல் ஓடிடி தளம் இதுதான்.

இதுகுறித்து அமைச்சர் சாஜி செரியன் கூறுகையில், “இந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் என பெயரிட்டுள்ளோம். இது மாநில அரசின் கலை, கலாச்சாரம், சினிமாத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகம் இதை நிர்வகிக்கும். திரையரங்குகளில் வெளியான பின்பே திரைப்படங்கள் இதில் வெளியிடப்படும்.

சினிமா திரையரங்குகளைக் காக்கும் பொறுப்பும் நமக்கு இருப்பதை உணர்ந்து இந்த தளத்தை உருவாக்கியுள்ளோம். இதனால் திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் கடுகளவுகூட பிரச்சினையை சந்திக்கமாட்டார்கள். சி ஸ்பேஸ் ஓடிடி தளத்தில், குறும்படங்கள், ஆவணப்படங்களும் திரையிடப்படும். இதனால் குறும்படம், ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும் திரையிட ஒரு மேடை கிடைக்கும்.

கொரோனா தொற்று காலத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மொத்தமே 70 படங்கள் தான் மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியாகின. உரிய ஓடிடி தளம் கிடைக்காமல் 85 படங்கள் நின்றது. கடன்வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்களின் நிலையோ, இன்னும் மோசமாகிவிட்டது. அதனால் தான் அரசின் ஓடிடி திட்டம் உருவானது. சி ஸ்பேஸ் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட வரும் ஜூன் 1 முதல் கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக்கழகத்திற்கு தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார். கேரள அரசின் இந்த முன்னெடுப்பு சிறுபட்ஜெட் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry