பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த 21 லட்சம் கோடி ரூபாய் எங்கே? மத்திய அரசை உலுக்கும் காங்கிரஸ்!

0
35

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம் கோடி எங்கே சென்றது? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வின் முதல் நாளிலேயே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி, பெட்ரோல்டீசல் விலை உயர்வு குறித்துப் பேச அனுமதிக்குமாறும், விவாதம் செய்ய அலுவல்களை ஒத்திவைக்குமாறும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு குறித்து மக்களின் கோபத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்த முயன்றோம். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். ஆனால், அதற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை. அதைக் கேட்கத் தயாராகவும் இல்லை.

ஆனால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எங்கள் கோரிக்கையை எழுப்புவோம். சாமானிய மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பேச முயன்றால், அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சாமானிய மக்களின் பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

மற்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சியுடன்தான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் எங்களுக்கு இணக்கமாக இருக்கிறார்கள். சாமானிய மக்களின் கவலைகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நாங்கள் எழுப்புவோம். மோடி அரசு கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் ரூ.21 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. அந்தப் பணம் எங்கே சென்றது, அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்தார்கள்?

ஒருபுறம் மத்திய அரசு கோடீஸ்வரர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வரியைக் குறைக்கிறது. மறுபுறம், பெண்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சாமானிய மக்கள் ஆகியோர் மீது கூடுதல் சுமையை ஏற்றுகிறது. அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை. உணவுப் பொருட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்துவிட்டது.

அரசின் கஜானாவை நிரப்பும் பணியை அரசு ஒருபுறம் செய்கிறது. ஆனால், விலைவாசி உயர்வு மக்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அரசு பார்க்க மறுக்கிறது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள வரி, வளர்ந்த நாடுகளில் கூட இல்லை. இந்த வரியைக் குறைக்கக் கோரி சோனியா காந்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியும் அரசு வரியைக் குறைக்க மறுக்கிறதுஇவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry