கூட்டணி தர்மத்தை மீறியதால், பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், திமுகவைக் கண்டித்தும் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உயிரிழந்த மண் என்பதால், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
ஆனால் ஒரே வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு தலைவர் பதவியை ஒதுக்குவதா? என திமுகவில் புகைச்சல் உருவானது. இந்த நிலையில், தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் என்பவரின் மனைவி செல்வமேரி மனுத்தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து திமுக நகர செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மறைமுக தேர்தலில், திமுகவைச் சேர்ந்த சாந்தி 11 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் வலியுறுத்தினார். இதை ஏற்று சில இடங்களில் மட்டுமே திமுகவினர் பதவி விலகினர். இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி வெற்றி பெற்ற திமுக தலைவர் சாந்தி பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில் காங்கிரசார் சுமார் 10நிமிடங்கள் வரை தியானத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருள்ராஜ், “திமுகவினர் துரோகம் இழைத்து விட்டார்கள். திமுகவை வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக தலைமை உத்தரவிட்டதுபோல சாந்தி ராஜினிமா செய்து கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ்குமாரை அவரது அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டோம். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. சதீஷ்குமார் விளக்கம் அளித்தால், அதை வெளியிட வேல்ஸ் மீடியா தயாராக இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry