அண்ணாமலைக்கு பொறுப்பு இல்லையா? பழிபோடுவது சரியா? குமுறும் பாஜகவினர்!

0
120

நகர்ப்புபற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், பாஜகவில் கிட்டத்தட்ட 8 மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே காரணம் என்பது போன்றதொரு கண்ணோட்டத்தை இது ஏற்படுத்துவதாக பாஜகவினர் பொருமுகின்றனர்.

திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தையும் முழுமையாக கலைத்து பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை உத்தரவிட்டார். இந்த மாவட்டங்களை சீரமைக்க புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார். இன்னும் பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது பல மாவட்ட பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கானது என்று கட்சியின் மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், “சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தலைவர் அண்ணாமலைக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றுச்சக்தியாக பாஜகவை மாற்றுவதற்கான செயல்திட்டங்களை அவர் வைத்துள்ளார். இதை நிறைவேற்றுவதற்கான போர் வீரர்களாக மாவட்ட தலைவர்களைப் பார்க்கிறார். இதனால் செயல்படாதவர்களைக் கட்சி பொறுப்புகளில் இருந்து களையெடுத்து வருகிறார். வேலை செய்யாத நிர்வாகிகளுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும்’ என்று அவர்கள் கூறினர்.

ஆனால், பாஜக கீழ்மட்ட நிர்வாகிகளின் கருத்து வேறாக இருக்கிறது. அவர்களிடம் பேசியபோது, “கடைசிவரை கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. கூட்டணி உண்டா, இல்லையா? என்பதை இறுதி செய்ய மாநில தலைமை தாமதம் செய்துவிட்டு மாவட்ட நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என, அவர்கள் மீது பழிபோடுவது சரியா? கட்சியின் வெற்றி, தோல்வியில் தலைவர் அண்ணாமலைக்கு பொறுப்பு இல்லையா? அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவிகிதம் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு உண்மையில் செல்வாக்கு உள்ளதா? மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பாஜக வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இது தான் உண்மை. பிறர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன், அண்ணாமலை, தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வதுதான் கட்சி வளர்ச்சிக்கு உதவும்” என்று கூறினார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry